Published:Updated:

`கொரோனா தேவிக்கு தினமும் பூஜை செய்யும் நம்பூதிரி!’ - கேரளத்தைக் கலக்கும் `கொல்லம்’ அனிலன்

கொரோனா தேவிக்கு பூஜை செய்யும் அனிலன் நம்பூதிரி
கொரோனா தேவிக்கு பூஜை செய்யும் அனிலன் நம்பூதிரி

``சிக்கன் பாக்ஸ் நோயை அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் எனக் கூறுவார்கள்''.

கேரள மாநிலம் கொல்லம் கடைக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் நம்பூதிரி என்பவர் தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள பூஜை அறையில் கொரோனா பிம்பத்தை வைத்து கொரோனா தேவியாக பாவித்து தினமும் வழிபாடு செய்கிறார். கேரளத்தில் தேவி வழிபாட்டில் தேவியின் கையில் இருக்கும் திடம்பு ஆயுதத்தில் (அரிவாள் போன்ற ஆயுதம்) கொரோனா ரூபத்தை நிறுவியிருக்கிறார். முகூர்த்தம் சாரிட்டபிள் டிரஸ்ட் சேர்மனாக இருக்கும் அனிலன் நம்பூதிரி காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தினமும் அவரது பூஜை அறையில் "ஓம் கொரோனா தேவியே, லோகா சமஸ்தா சுகினோ பவந்து..." என அவர் மந்திரம் சொல்லி கொரோனா-வை தேவியாக ஆராதிக்கிறார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். சிலர் அவர் முட்டாள்தனமான வழிபாடு செய்கிறார் என்றும் கிண்டல் செய்கிறார்கள்.

இதுகுறித்து அனிலனிடம் பேசினோம்.``வைரஸ் நோய்களை கடவுளாக பாவிக்கும் தன்மை இந்தியாவில் உண்டு. சிக்கன் பாக்ஸ் நோயை அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் எனக்கூறுவார்கள்.

அனிலன் நம்பூதிரி
அனிலன் நம்பூதிரி

கேரளத்தில் சிக்கன் பாக்ஸ் நோயை வசூரி என அழைப்பார்கள். கொல்லத்தில் கூட பல ஆலயங்களில் வசூரிக்கு எனத் தனி பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்துவருகிறது. கொரோனா தேவியை வழிபட வேண்டும் என நான் யாரையும் அழைக்கவில்லை. என் வீட்டில் நான் வழிபடுவது எனது தனிப்பட்ட நம்பிக்கை. இங்கு வழிபாடு செய்ய வருபவர்கள் காணிக்கை வழங்க வேண்டும் எனவும் நான் கேட்கவில்லை. எனது வருமானத்துக்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்.

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம் அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன்" என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்திற்கு ஆரத்தி எடுக்கிறார்.

கொரோனா தேவிக்கு பூஜை செய்யும் அனிலன் நம்பூதிரி
கொரோனா தேவிக்கு பூஜை செய்யும் அனிலன் நம்பூதிரி

கொரோனா தேவி வழிபாடு காரணமாக உங்களை மனநலம் சரியில்லாதவர் எனக் கூறுகிறார்களே என அவரிடம் கேட்டதற்குக் கோபப்படாமல் பதில் சொல்கிறார்.``இப்போது அல்ல எப்போதே என்னை அப்படி சொல்லிவிட்டார்கள். இங்கு மனநலத்துடன் இருப்பவர்கள் யார் என மனநல மருத்துவர்கள் அடையாளம் காட்டட்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழிபாட்டு முறைக்கான உரிமை உள்ளது. இது எனது வழிபாட்டுமுறை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு