Published:Updated:

`பா.ஜ.க தலைவர் ஒருவரின் கருத்து.. வருமான வரித்துறை ரெய்டு!'-விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கேரள அமைச்சர்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

`இந்த நெறியற்ற நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடுமுழுவதும் ஒன்றாக குரல்கொடுக்க வேண்டும்!' - கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜன்

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. மேலும், ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்டவைகளில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை தயாரித்தது. இதனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்க்கு சம்மன் கொடுத்து அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வருமானவரிக் கணக்கில் காட்டாத பணத்தை நடிகர் விஜய் சம்பளமாக வாங்கியிருப்பதாகத் தெரியவந்தால், அவர் மீது தனியாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வருமானவரி விசாரணையின் பின்னணியில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் காய் நகர்த்தல்களும் அதனால் ஏற்பட்ட எதிர்வினையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தமிழக சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜன்
கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜன்

இந்த நிலையில், தமிழ் நடிகர் விஜய்க்கு ஆதரவாக கேரள மாநில தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தனது முகநூல் பதிவில், ``தமிழ் நடிகர்களில் சூப்பர் நட்சத்திரமான விஜய்யை கஸ்டடியில் எடுத்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தங்களை விமர்சிப்பவர்களை எந்த வழியிலாவது அடக்குவதுதான் சங்பரிவாரின் வழிமுறை. நாட்டை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் ஜி.எஸ்.டி-யையும் `மெர்சல்' திரைப்படத்தில் விஜய் விமர்சித்திருந்தார். `சர்கார்' சினிமாவில் அ.தி.மு.க அரசை விமர்சித்தார். இதுதான் விஜய் மீது மத்திய அரசுக்கு எரிச்சல் ஏற்பட்டதற்கான காரணம்.

சங்பரிவாரின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் சினிமா நடிகர்கள், எழுத்தாளர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது, பொய் வழக்கு போட்டு பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சங்பரிவாரின் மிரட்டலைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும், போராடுபவர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள்.

அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் முகநூல் பதிவில்
அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் முகநூல் பதிவில்

குடியுரிமைச் சட்ட திருத்தம் அநீதி என கூறிய மலையாள சினிமாக்காரர்கள் வருமானவரித்துறை ரெய்டு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியதையும் நடிகர் விஜய்க்கு எதிரான நடவடிக்கையையும் சேர்த்து பார்க்க வேண்டும். இந்த நெறியற்ற நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடுமுழுவதும் ஒன்றாக குரல்கொடுக்க வேண்டும்" என்றார்.

பின் செல்ல