வறுமையால் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்த கேரள தாய்க்கு அரசு வேலை... மாதம் ரூ. 17,000 சம்பளம்!
ஸ்ரீதேவி வசித்த கொட்டகைக்குள் கேரள குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். கொட்டகைக்குள் உணவுப் பொருள்கள் மருந்துக்குக் கூட அதிகாரிகள் கண்களில் தென்படவில்லை.

திருவனந்தபுரத்தில் கைத்தாமுக்கு என்ற இடத்தில் புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்து ஸ்ரீதேவி என்பவரின் குடும்பத்தினர் வசித்துவந்துள்ளனர். ஸ்ரீதேவியின் கணவர் மதுவுக்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு 6 குழந்தைகள். மூத்த மகனுக்கு 7 வயதாகிறது. மூன்றரை மாதக் கைக்குழந்தையும் உள்ளது. கணவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்துள்ளார். வீட்டில் வறுமை தாண்டவமாடியுள்ளது. இதனால், குழந்தைகளை வளர்க்க முடியாமல் ஸ்ரீதேவி திணறியுள்ளார்.

சில சமயங்களில் பசி தாங்க முடியாமல் குழந்தைகள் மண்ணை அள்ளித் தின்றுள்ளன. இதைப் பார்த்த தாயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேரளாவில் `அம்மாத் தொட்டில்' என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் திட்டம் உள்ளது. தொடர்ந்து, Child Welfare board - அதிகாரிகளிடத்தில் தங்களின் 6 குழந்தைகளில் 4 குழந்தைகளை ஒப்படைக்க ஸ்ரீதேவி மனு அளித்திருந்தார். மனுவில், `குழந்தைகள் பசியால் மண்ணை சாப்பிடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைவதாக' சாந்தி குறிப்பிட்டிருந்தார். மனுவைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒன்றரை வயது குழந்தை மற்றும் மூன்றரை மாத கைக்குழந்தையை மட்டும் தான் வைத்துக்கொள்ளப் போவதாகவும் மனுவில் ஸ்ரீதேவி குறிப்பிட்டிருந்தார்.
வறுமை காரணமாக பெற்ற குழந்தைகளை பெண் அரசிடத்தில் ஒப்படைத்த சம்பவத்தையடுத்து அங்கே வந்த திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமார், ``ஸ்ரீதேவிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. குழந்தைகளின் படிப்புச் செலவுகளை திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும். மாநகராட்சியில் அவருக்கு தற்காலிக வேலை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது '' என்றார்.

முதல் கட்டமாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார நிலையத்தில், ஸ்ரீதேவிக்கு துப்புரவுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு மாதம் ரூ.17,000 சம்பளம் வழங்கப்படும். திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமாரிடம் இருந்து பணி ஆணையை பெற்றுக்கொண்ட ஸ்ரீதேவி கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.