Published:Updated:

கர்நாடகாவிலிருந்து மதுகடத்தியவர்களை மடக்கிய கேரள காவலர்! - கொரோனாவால் பலியான சோகம்

கொரோனாவால் மரணமடைந்த கேரள மதுவிலக்கு காவலர் சுனில்குமார்
கொரோனாவால் மரணமடைந்த கேரள மதுவிலக்கு காவலர் சுனில்குமார்

கொரோனா தொற்றுக்கு மதுவிலக்குப் பிரிவு காவலர் இறந்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து மது கடத்தி வந்தவர்களை சில நாள்களுக்கு முன்பு மடக்கியதால் அவர்கள் மூலம் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பரவியது கேரள மாநிலத்தில்தான். ஆரம்பத்திலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன் மாதிரியாகச் செயல்பட்டுவருகிறது கேரளம். இன்றைய நிலவரப்படி கேரளத்தில் 1,358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,413 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 89 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,27,231 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 108 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியூரைச் சேர்ந்த மதுவிலக்குப் பிரிவு காவலர் சுனில் குமார் (28) இன்று மரணமடைந்துள்ளார். இதனால் கேரளத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

கண்ணூர் மாவட்டம் மட்டனூர் மதுவிலக்கு பிரிவில் டிரைவராகப் பணிபுரிந்த சுனில்குமாருக்கு கடந்த 13-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து பரியாரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. சீரியசான நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று மரணமடைந்தார்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடலில் வேறு நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆபத்து என கூறப்பட்டுவந்தது. ஆனால், 28 வயதே ஆன மதுவிலக்கு காவலர் சுனில் குமாருக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில், கொரோனா பாதித்து அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக மதுவிலக்கு பிரிவு காவலர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மட்டனூர் மதுவிலக்குப்பிரிவு அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அங்கு பணிபுரிந்துவந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுனில்குமாருக்கு கொரோனாத் தொற்று எப்படி ஏற்பட்டது என கண்டுபிடிக்கப்படவில்லை.

மதுவிலக்கு காவலர் சுனில்குமார்
மதுவிலக்கு காவலர் சுனில்குமார்

கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து இரண்டு பேர் மது கடத்தி வந்துள்ளனர். அவர்களை விரட்டிப்பிடிக்கும் முயற்சியில் சுனில்குமாரும் ஈடுபட்டுள்ளார். அதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனச் சோதனையில் தெரியவந்துள்ளது. அதே சமயம் தப்பிச் சென்ற மற்றொருவருக்கு கொரோனா இருந்திருந்தால் அதன் மூலம் காவலர் சுனில் குமாருக்கு பரவியிருக்கலாம். தப்பிச் சென்றவரை கைது செய்து மாதிரிகளை சோதனை செய்தால்தான் அதற்கான விடைகிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு