Published:Updated:

10 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஊரடங்கு! - கேரளா வைரல் காதல் தம்பதி விவகாரம் `வெளிவந்தது’ எப்படி?

சஜிதா - ரஹ்மான்
சஜிதா - ரஹ்மான்

காதலுக்காக, ஓர் இளைஞர் தனது காதலியை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் தனது அறையில்வைத்து வாழ்ந்த அரிதான சம்பவம் நடந்துள்ளது.

`கில்லி’ படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜிடமிருந்து தப்பிக்க, ஹீரோ விஜய், த்ரிஷாவை யாருக்கும் தெரியாமல் தனது ரூமில் மறைத்து வைத்திருப்பார். உணவு முதல் அனைத்து விஷயங்களையும் த்ரிஷாவுக்கு அந்த ரூமிலேயே கிடைக்கச் செய்வார் விஜய். இதேபாணியில்,` கில்லி’ படத்தை விஞ்சும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

காதல்
காதல்
pixabay
10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்து வைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!

காதலுக்காக, ஓர் இளைஞர் தனது காதலியைக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் தெரியாமல் தனது அறையில் வைத்து வாழ்ந்துள்ள அரிதான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நென்மாரா பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான் (வயது 34). எலெக்ட்ரீஷியன் வேலை செய்துவருகிறார். இவருக்கும் அயிலூர் பகுதியைச் சேர்ந்த சஜிதா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரின் வீடும் அருகருகே இருந்தாலும், வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்று சந்தேகித்துள்ளனர்.

சஜிதா ரஹ்மான்
சஜிதா ரஹ்மான்

இதனால், எந்தத் தகவலும் சொல்லாமல் சஜிதா கடந்த 2010-ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி, ரஹ்மான் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இது குறித்து சஜிதாவின் பெற்றோர் அப்போதே புகார் கொடுத்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ரஹ்மான் வீட்டில் இருந்தது சஜிதா பெற்றோருக்கு மட்டுமல்ல... சஜிதா இருந்த விஷயம் 10 ஆண்டுகளாகியும் ரஹ்மான் பெற்றோருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஹ்மான் அறையில் அவர்களின் காதல் தொடர்ந்துள்ளது.

ரஹ்மான் அறை
ரஹ்மான் அறை

ரஹ்மானின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். ரஹ்மான் வேலைக்குச் செல்லும்போது அவரது அறையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவாராம்.

உணவு சாப்பிடும்போது தனது அறைக்குச் சென்றுதான் சாப்பிடுவாராம். அப்போது தனக்கு வைத்திருக்கும் உணவை சஜிதாவுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். யாருக்கும் சந்தேகம் வராதபடி ஜன்னல் கம்பியைக் கழற்றி மாற்றும்படி அமைத்துள்ளார். கழிப்பறை மற்றும் மற்ற தேவைகளுக்கு சஜிதா அந்த வழியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

ரஹ்மான் வீடு
ரஹ்மான் வீடு

இத்தனைக்கும் ரஹ்மான் வீடு பங்களா எல்லாம் இல்லை. மூன்றே அறைகளைக்கொண்ட ஓட்டு வீடுதான். ஆனாலும், தனது அறையிலுள்ள காதலி சஜிதாவைப் பாதுகாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அதன்படி, அவர் மட்டும் திறக்கும்படியான எலெக்ட்ரானிக் பூட்டை தனது அறையில் மாட்டியிருக்கிரார். வேறு யாராவது கதவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில், கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். அவரது அறையில் டி.வி வைத்திருந்தாலும், அது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, தனியாக ஒரு ஹெட்போனும் கொடுத்துள்ளார்.

இந்த விஷயமெல்லாம் தெரியாத ரஹ்மான் பெற்றோர், அவருக்கு நிக்காஹ் செய்ய வரன் பார்த்துவந்துள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மான் காதலி சஜிதாவுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். இது குறித்து ரஹ்மான் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இந்தநிலையில், ரஹ்மான், சஜிதா தம்பதி நென்மாரா அருகேயுள்ள விதன்னசேரி பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்த விஷயம் காவல்துறைக்குத் தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் ஒன்றாக வாழ விரும்புவதால், நீதிமன்றம் அவர்கள் காதலுக்கு அனுமதி கொடுத்து அனுப்பிவிட்டது.

நீதிமன்றம் வரை சென்ற பிறகுதான் இந்தக் காதல் கதை வெளியில் வந்துள்ளது. தற்போது, இருவரும் மீண்டும் விதன்னசேரி பகுதியிலுள்ள வீட்டில் வாழத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தக் காதலைவைத்து அரசியலும் தொடங்கியுள்ளது. சஜிதாவை ரஹ்மான் மதம் மாற்றிவிட்டார் என்று கிளப்பிவிட, அந்தத் தகவலை ரஹ்மான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர்களுக்கு உதவும்விதமாக பல பகுதிகளிலிருந்து மக்களும், காவல்துறையினரும் அடுப்பு, கட்டில் சமையல் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றைத் தேடி வந்து கொடுக்கின்றனர்.

ஜன்னல்
ஜன்னல்

ஆலத்தூர் எம்.பி ரம்யா ஹரிதாஸ் அவர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் சஜிதாவை, அவர்களது வீட்டுக்கே சென்று பெற்றோர் வேலாயுதன், சாந்தா சந்தித்துப் பேசியுள்ளனர்.

இவர்களின் காதல் தொடர்பாக போலீஸார் இருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். ஆனால், இரண்டு பேரும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்ல காவல்துறையே இவர்களின் காதலைக் கண்டு வியந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு,

எம்.பி ரம்யாவுடன் ரஹ்மான் சஜிதா
எம்.பி ரம்யாவுடன் ரஹ்மான் சஜிதா

"இது மிகவும் கடினம். 10 ஆண்டுகள் எப்படிச் சமாளித்தோம்? என்று எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இனி எங்கள் காதலை சுதந்திரமாகக் கொண்டாடுவோம்" என்றனர் மகிழ்ச்சியுடன்.

சஜிதா - ரஹ்மான் வீட்டுக்கு 500 மீட்டர்தான் தொலைவு. ரஹ்மான் தங்கையின் தோழிதான் சஜிதா. 500 மீட்டர் தொலைவில் இருந்தும் அவரைக் கண்டுபிடிக்கவில்லை. பலர் சஜிதா தமிழ்நாட்டுக்கு யாருடனோ சென்றுவிட்டார் என்றெல்லாம் நினைத்துவிட்டனர். இவர்களின் காதலை வெளிக்கொண்டு வந்தது ஊரடங்குதான்.

போலீஸ்
போலீஸ்

கொரோனா ஊரடங்கால் ரஹ்மானுக்கு வேலையில்லை. ஊரடங்குக்கு முன்பு வேலை இருந்ததால், தன்னுடைய உணவில் அவருக்குப் பங்களித்துள்ளார். ஆனால், ஊரடங்கால் அவர் சாப்பிடுவதே பிரச்னையாகியிருக்கிறது. இதனால், ரஹ்மானின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரஹ்மானின் பெற்றோர், 'இவனுக்கு ஏதோ பிடித்துவிட்டது என்று வெளியிலிருந்து மந்திரிவாதியை அழைத்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் ரஹ்மான் ஒருகட்டத்தில் சஜிதாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஒருநாள் ரஹ்மானை அவரது சகோதரர் பார்க்க, அனைத்து விஷயங்களும் வெளிவந்துவிட்டன.

10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்து வைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!
அடுத்த கட்டுரைக்கு