Published:Updated:

`சாலையில் பயணிக்கவே பயமாக இருக்கிறது!’ -நீதிபதிக்குக் கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன்

சாலைகளில் புகைபிடித்துக்கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தால் சாதாரணமாக கடந்து செல்லாமல் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றவும் ஆரவ் தயங்கியதில்லை.

மாணவன் ஆரவ்
மாணவன் ஆரவ் ( Mathrubhumi )

கேரளாவில், எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி என்னும் ஊரில் வசித்துவரும் சிறுவன், ஆரவ். கேரளாவில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தன்னுடைய பள்ளிக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்று வருகிறார். சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள சாலையில் மிக அதிகமான பள்ளங்கள் இருந்திருக்கின்றன. சாலையை சரிசெய்ய பலமுறை புகார் கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

கேரள சாலை
கேரள சாலை

சமீபத்தில், `நீதிபதி ஒருவர் சாலையை சீரமைக்க முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்’ என்ற செய்தியைப் படித்துள்ளார் மாணவர் ஆரவ். தன்னுடைய அப்பாவிடம் இந்த நீதிபதி குறித்து கேட்டறிந்தவர், அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, தன் அம்மாவின் உதவியுடன் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், `அதிகமாக பள்ளங்கள் உள்ள சாலையில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது. ஒவ்வொருமுறை பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரவ்வின் அம்மா செவ்வாய்க்கிழமை இந்தக் கடிதத்தை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமைக்குள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. சமூகத்தின் மேல் அக்கறையோடு இருக்கும் ஆரவ் இதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுவது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, தீவின் சாலை அருகே குவிந்துகிடந்த குப்பைகளை தன்னுடைய அப்பாவின் அலைபேசியில் புகைப்படம் எடுத்து பிரதமரின் செயலிக்கு அனுப்பியுள்ளார்.

பிரதமரின் செயலி
பிரதமரின் செயலி

சாலைகளில் புகைபிடித்துக்கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தால் சாதாரணமாக கடந்து செல்லாமல் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றவும் ஆரவ் தயங்கியதில்லை.

`கடிதத்தின் மூலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ஆரவ் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று மாத்ரூபூமி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய பாட்டியின் உதவியுடன் ஆரவ் இந்த மாதிரியான சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.