Published:Updated:

`குறிவைத்து நான் திருட வரவில்லை!' -ராணுவ அதிகாரி வீட்டுச்சுவரில் மன்னிப்புக் கடிதம் எழுதிய திருடன்

சுவரில் திருடன் எழுதிய மன்னிப்பு
சுவரில் திருடன் எழுதிய மன்னிப்பு

``ராணுவ அதிகாரி ஒருவரின் வீடு என்பது எனக்குத் தெரியாது. குறிவைத்து இந்த வீட்டுக்கு நான் திருட வரவில்லை" என்றும் அந்தத் திருடன் எழுதியுள்ளான்.

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள திருவான்குளம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காகத் திருடன் நுழைந்துள்ளான்.

ராணுவ அதிகாரியின் வீடு எனத் தெரியாமல் நுழைந்த திருடன் கடைசித் தருணத்தில் அது கர்னல் ஒருவரின் வீடு என்பதை உணர்ந்துள்ளான். பின்னர், வீட்டின் சுவரில், ``ராணுவ அதிகாரி ஒருவரின் வீடு என்பது எனக்குத் தெரியாது. குறிவைத்து இந்த வீட்டுக்கு நான் திருட வரவில்லை. வீட்டுக்குள் நுழைந்து ராணுவத் தொப்பி ஒன்றைப் பார்த்த தருணத்தில்தான் இது கர்னல் ஒருவரின் வீடு என்பதை உணர்ந்தேன். என்னை மன்னித்து விடுங்கள்" என மார்க்கரைப் பயன்படுத்தி எழுதியுள்ளார்.

திருட்டு
திருட்டு
மாதிரி படம்

மேலும், `களவு செய்யாதே' என்ற பைளின் ஏழாவது கட்டளையைக் குறிப்பிட்டு `` நான் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன்" என்றும் சுவரின் மற்றோர் இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தநாள் காலையில், வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வழக்கம்போல வந்துள்ளார். கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினரிடம் புகாரும் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் வீட்டிலுள்ள பொருள்கள் எதுவும் திருடப்படவில்லை எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அந்தத் திருடனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் `தேசபக்தி மிக்க திருடன்' என கமென்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். எனினும் இந்தச் சம்பவம் வேடிக்கையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

`வீட்டு வாடகை ரூ.30,000; ஸ்கூல் பீஸ் ரூ.2 லட்சம்!’ -ரயில்வே போலீஸாரை மிரளவைத்த ஹைதராபாத் திருடன்
அடுத்த கட்டுரைக்கு