Published:Updated:

கேரளா: நாளை முதல் லாக்டௌன்... கொரோனா புறநோயாளிகளுக்கு `இ-சஞ்சீவனி' மூலம் சிகிச்சை

கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு டெலி மெடிசின் தொடக்கம்
கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு டெலி மெடிசின் தொடக்கம்

கொரோனா புற நோயாளிகளுக்கு 'இ-சஞ்சீவனி' என்ற திட்டம் மூலம் ஆன்லைனில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

கேரளத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 40,000-க்கும் மேல் புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்றைய கணக்குப்படி 42,464 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் மொத்தம் 3,90,906 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 27,152 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 13,89,515 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். நேற்று 63 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கேரளத்தில் மொத்த கொரோனா மரணம் 5,628 ஆக உயர்ந்துள்ளது. எனவே, கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது கேரள அரசு.

இந்நிலையில், கொரோனா புற நோயாளிகளுக்கு `இ-சஞ்சீவனி' என்ற திட்டம் மூலம் ஆன்லைனில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா முதல் அலையில் பொது மருத்துவத்துக்காக மட்டும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இப்போது கொரோனா நோயாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``லாக்டெளன் சமயத்தில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு, டெலி மெடிசின் வழியாக 24 மணி நேரமும் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் செயல்படும். கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்தச் சேவை வழங்கப்பட உள்ளது.

இதற்காக சிறப்பு மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்புகொள்ளுவதன் மூலம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏட்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இ-சஞ்சீவனி
இ-சஞ்சீவனி

கொரோனா புறநோயாளிகள் பிரிவு மட்டுமல்லாது, காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உட்பட 35 வகையான புறநோயாளிகள் பிரிவு செயல்படுத்தப்படும். கொரோனா இருப்பவர்களுக்கு அறிகுறி இல்லாத நிலை உள்ளதால் வீட்டில் இருப்பதுதான் நோய்ப் பரவலை தடுக்கும் வழி. யாரிடம் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை தேடும் வழிதான் இந்த `இ-சஞ்சீவனி' திட்டம்.

மொபைல் போன், டேப்லெட் மூலமாக esanjeevaniopd.in என்ற வெப்சைட்டுக்குச் சென்று தங்கள் மொபைல் எண் மூலம் புற நோயாளிகள் ரெஜிஸ்டர் செய்யலாம். மொபைலுக்கு வரும் ஓ.டி.பி மூலம் லாக் இன் செய்து உள்ளே நுழையலாம். வீடியோ காலிங் மூலம் மருத்துவர்கள் உங்களிடம் பேசி நோய் குறித்த விபரங்களைக் கேட்டு தெரிந்துகொள்வார்கள். அதன்பிறகு மருந்து வாங்கவும், பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதுகுறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1056, 04712552056 என்ற எண்களுக்கு அழைக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Photo by National Cancer Institute on Unsplash

கேரளத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக 0471 2309250 என்ற எண் உள்ளிட்ட ஐந்து எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இதில் கேட்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு