Published:Updated:

கேரளா: பிரியாணி விற்ற திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை! - உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்

ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட திருநங்கை ஸஜனா
ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட திருநங்கை ஸஜனா

`ஃபுட் இன்ஸ்பெக்டர்னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து எங்களை பயமுறுத்தினாங்க. நாங்க ஃபுட் சேப்டி லைசென்ஸ் எடுத்துட்டுதான் இந்த வியாபாரத்துல இறங்கினோம். ஆனாலும், எங்களை ஜீவிக்க விட மாட்டேங்கிறாங்க' என வீடியோவில் கலங்கியிருந்தார் திருநங்கை ஸஜனா.

கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் திருநங்கை ஸஜனா ஷஜியும் அவருடைய நண்பர்கள் சாலை ஓரத்தில் பிரியாணிப் பொட்டலம் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். ஒரு பிரியாணிப் பொட்டலத்தை 60 ரூபாய். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர், ஸஜனாவிடமும் அவருடைய தோழர்களிடமும் பிரச்னை செய்திருக்கிறார்கள். இது பற்றி காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஸஜனா தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார்.

அதில் ஸஜனா கூறுகையில், ``பிரியாணி வியாபாரம் தொடங்கியபோது நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இப்போது மொத்த பிரியாணியும் விக்க முடியாம திரும்பக் கொண்டுவருகிறேன். கொஞ்ச நாளா சிலர் எங்களை பயங்கரமாக டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் வியாபாரம் செய்ய விட மாட்டேங்கறாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெயின்ட் கொடுத்தால், அவங்க எடுக்கலை. என்ன செய்யறதுன்னே தெரியலை. கையில இருந்த காசுல இந்த பிரியாணிக் கடையை சின்ன அளவுல தொடங்கினோம்.

ஸஜனாவின் சாலை ஓர பிரியாணிக் கடை
ஸஜனாவின் சாலை ஓர பிரியாணிக் கடை

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. இப்ப இவங்க பிரச்னை செய்யறதுனால எல்லா பிரியாணி பொட்டலமும் விக்காம இருக்குது. நான் யார்கிட்ட போய்ச் சொல்லுவேன்? எங்களுக்கு யாரும் ஆதரவா இல்லை. சமூகத்தில அந்தஸ்தா ஒரு வேலை செய்து ஜீவிக்கணும்னு நினைக்கிறோம். ராத்திரி நேரத்துல தெருவுலயும், ரயில்லயும் பிச்சை எடுக்கும்போது `வேலை செய்து பிழைக்கக் கூடாதா’னு நீங்கல்லாம் கேட்பீங்கதானே... ஆனா, இப்போ நாங்க வேலை செஞ்சு பிழைக்க நீங்க சம்மதிக்காம இருந்தா நாங்க என்ன பண்ணுவோம்? போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு நாளா கம்ப்ளெயின்ட் கொடுத்தோம். ஆனா அவங்க அதைக் கண்டுக்கவே இல்லை.

திருச்சி: பாலியல் தொல்லை; மிரட்டல்! - காவலர் பயிற்சிப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

`ஃபுட் இன்ஸ்பெக்டர்’னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து எங்கலை பயமுறுத்தினாங்க. நாங்க ஃபுட் சேப்டி லைசென்ஸ் எடுத்துக்கிட்டுதான் இந்த வியாபாரத்துல இறங்கினோம். ஆனாலும் எங்கள ஜீவிக்க விட மாட்டேங்கிறாங்க. சிலர் எங்க வண்டியின் ரெண்டு பக்கமும் நின்னுக்கிட்டு எங்களைப் பரிகாசம் பண்ணுறாங்க. நாங்க நாலைஞ்சு திருநங்கைகள்தான் இருக்கிறோம். யார்கிட்ட சொல்லுவோம்?" எனப் புலம்பியிருந்தார். இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, ஸஜனாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா

இது குறித்து கே.கே.ஷைலஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஸஜனாவுக்கு நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டேன். அவரை போனில் அழைத்துப் பேசினேன். தேவையான உதவியும் பாதுகாப்பும் வழங்குவதாக உறுதி கூறினேன். திருநங்கைகள் ஆண், பெணுக்குச் சமமான குடிமக்கள்தான். இந்த அரசு திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கியது போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. ஸஜனாவையும் அவருடைய நண்பர்களையும் அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸஜனாவும், அவருடைய நண்பர்களும் சொந்தமாகச் தொழில் செய்து சமூகத்தில் மரியாதையுடன் வாழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் சிலர் ஸஜனாவுக்குப் பண உதவி செய்திருக்கிறார்கள். சிலர் அவர் மீண்டும் சொந்தமாகத் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். உதவியால் நெகிழ்ந்த ஸஜனா, அந்த நல்ல உள்ளங்களுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு