அனன்யா குமாரி அலெக்ஸ்... கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் உச்சரிக்கப்பட்ட திருநங்கையின் பெயர் இது. கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான அனன்யா குமாரி, கேரள மாநிலத்தின் முதல் ஆர்.ஜே (Radio Jockey) திருநங்கையாவார். திருநங்கைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த அனன்யா குமாரி அலெக்ஸ், நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலிலும் களம் கண்டார்.

கேரளா தேர்தல் களத்தில் போட்டியிட்ட முதல் திருங்கையும் அனன்யா குமாரிதான். இப்படிப் பல்வேறு சாதனைகளுக்காகப் பேசப்பட்ட அனன்யா, தற்போது அவருடைய மர்மமான மரணத்தின் காரணமாகப் பேசுபொருளாகி இருப்பது வேதனையளிக்கிறது.
செவ்வாய்க்கிழமை மாலை அனன்யா குமாரி கொச்சி எடப்பள்ளி பகுதியில் உள்ள தனது அப்பார்ட்மென்ட் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டபோது, அனன்யா இந்தியா முழுவதும் அறியப்பட்ட நபரானார். நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்தார்.
மலப்புரம் மாவட்டம் வெங்கரா தொகுதியில், காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஸ்டார் வேட்பாளரான பி.கே குன்ஹலிகுட்டியை எதிர்த்து ஜனநாயக சமூக நீதி கட்சி சார்பில் போட்டியிட்டார் அனன்யா.

ஆனால், தனது சொந்தக் கட்சியில் இருந்து வந்த மிரட்டல், துன்புறுத்தல் காரணமாகத் தேர்தல் களத்தில் இருந்து விலகினார். இதுகுறித்து அனன்யா அப்போது, ``காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குன்ஹலிகுட்டி குறித்து மிகவும் தரக்குறைவாகப் பேசக் கூறினர். அதேபோல கம்யூனிஸ்ட் அரசு குறித்தும் கடுமையாக விமர்சிக்கச் சொன்னார்கள். சொந்தக் கட்சிக்காரர்களே என்னை மிரட்டி, துன்புறுத்தி அழுத்தம் கொடுத்தனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் விலகுகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, அனன்யா குமாரி ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், ஒப்பனை கலைஞராகவும் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு அனன்யா ஒரு தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அன்னயா உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்தார்.
அறுவை சிகிச்சையில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால், வழக்கமான பணிகளைக் கூட செய்ய முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய பேசு பொருளாகியிருந்தது.

இந்நிலையில், தனது அப்பார்ட்மென்ட் வீட்டில் உள்ள பெட்ரூமில் அனன்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனன்யாவின் நண்பர்கள் கூறுகையில், ``பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் விருப்பப்படி வாழலாம் என அனன்யா நிறைய கனவுகளை வைத்திருந்தார்.
அது தோல்வியில் முடிந்ததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். நாங்கள் அவருக்கு மறு அறுவை சிகிச்சை செய்ய நிதித் திரட்டி வந்தோம். சில நாள்களுக்கு முன்பு அவரிடம் பேசியபோது கூட நன்றாகதான் இருந்தார்.
இப்படி ஒரு நிலை ஏற்படும் என நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. கேரளாவில் பல தனியார் மருத்துவமனைகள், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால், இந்த அறுவை சிகிச்சைகள் எப்படி நடக்கின்றன என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. அனன்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளோம். இதன் பிறகாவது பாலின மாற்று அறுவை சிகிச்சை முறைகளை அரசு கண்காணிக்க வேண்டும்” என்றனர்.

அப்பார்ட்மென்ட்டில் இருந்து அவரது இணையர் வெளியேறியதால் கூட அனன்யா இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ``அனன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனை முடிவில்தான் அவர் மரணத்துக்கான காரணங்கள் வெளியில் வரும்.
இதுதொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று கமலசேரி போலீஸார் கூறியுள்ளனர்.