Published:Updated:

`உள்ளூர் வளங்களின் உரிமை அப்பகுதி மக்களுக்கானது!’- எம்.பி வீரேந்திரக்குமார் நினைவில் நெகிழும் கேரளா

எம்.பி.வீரேந்திரகுமார்
எம்.பி.வீரேந்திரகுமார்

`சமுதாய நலனும், போராட்டங்களும் துன்பத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது' என்பதை அவர் நம்பினார்.

மலையாளச் செய்தி நிறுவனமான மாத்ரு பூமி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் எம்.பி. வீரேந்திர குமார் தனது 84 வயதில் உயிரிழந்தார். இந்தியச் செய்தித்தாள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், இந்தியா பிரஸ் டிரஸ்ட் (பி.டி.ஐ) அறங்காவலர், சர்வதேசப் பத்திரிகை நிறுவனத்தின் உறுப்பினர், காமன்வெல்த் பத்திரிகை சங்க உறுப்பினர், உலகச் செய்தித்தாள்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஜனதா தளம் (யு) மாநிலக் குழுவின் தலைவராகப் பணியாற்றியவர் எம்.பி.வீரேந்திரகுமார்.

பிரபல எழுத்தாளர், சோசலிசத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்தவர் எனப் பல புகழுக்குச் சொந்தக்காரர். கோழிக்கோட்டில் கடந்த மே 28-ம் தேதி இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 1936-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பற்றாவில் பிறந்தார். ராஜ்யசபை எம்.பியாகவும், கோழிக்கோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாகவும் செயல்பட்டார். எம்.பி.வீரேந்திரகுமார் மக்களுக்காக ஆற்றிய பணிகளை கேரள மக்கள் சிலாகித்து நினைவுகூர்ந்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கேரள மாநிலம் பாலக்காட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சிய கொக்கோ கோலா கம்பெனியை அங்கிருந்து விரட்ட எம்.பி.வீரேந்திரகுமார் நடத்திய போராட்டம் குறித்து பெருமாட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.

கொக்கோ கோல கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் எம்.பி.வீரேந்திரகுமார்
கொக்கோ கோல கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் எம்.பி.வீரேந்திரகுமார்

இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், ``பாலக்காடு மாவட்டம் பிலாச்சிமடைப் பகுதியில் 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் கொக்கோகோலா கம்பெனி தொடங்கப்பட்டது. கொக்கோ கோலா கம்பெனி அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தொடக்கத்தில் சிறிய அளவில் நடந்த போராட்டத்தை உலகம் அறியும் வகையில் முன்னெடுத்துச் சென்றவர் எம்.பி.வீரேந்திரகுமார். அதற்காக அவர் மாத்ருபூமி பத்திரிகையையும் பயன்படுத்தினார். போராட்டம் நடந்த சமயத்தில் ஜனதாதளம் மாநில தலைவராக இருந்தார் எம்.பி.வீரேந்திரகுமார்.

சமுதாய நலனும் போராட்டங்களும் துன்பத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது என்பதை அவர் நம்பினார். இந்தப் போராட்டத்தில் பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து மக்களுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டுசென்றதன் பின்னால் எம்.பி.வீரேந்திர குமாரின் சிந்தனைகள் பலமாக இருந்தன. பெரும் விளம்பரத்தால் வரும் வருவாய் குறித்து கவலைப்படாமல் தனது பத்திரிகையை மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தார்.

எம்.பி.வீரேந்திரகுமார்
எம்.பி.வீரேந்திரகுமார்

குடிநீர் உள்ளிட்ட உள்ளூர் வளங்களின் உரிமை அப்பகுதி மக்களுக்கானது என்ற எம்.பி. வீரேந்திரகுமாரின் சோஷலிச கருத்துகளை இந்தச் சமூகம் ஏற்றுச் செயல்படுத்தியது. 2004 ஜனவரி 21 முதல் 23 வரை பிலாச்சிமடையில் நடந்த உலகத் தண்ணீர் மாநாடு அந்தப் போராட்டத்தை உலகம் அறியச் செய்தது. அந்த மாநாட்டை நடத்த எம்.பி.வீரேந்திரகுமார் மற்றும் இப்போதைய கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர்தாம் முழு மூச்சாகச் செயல்பட்டனர். கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற எம்.பி.வீரேந்திரகுமாரின் பங்கு அளப்பரியது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு