Published:Updated:

12 ஆண்டுகளுக்கு முன் தந்தை கொலை... குற்றவாளி குடும்பத்துக்கு ஆச்சர்யமளித்த கேரளப் பெண் !

மேத்தீவ்
மேத்தீவ்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நாய்சி என்ற இளம்பெண் தன் தந்தையைக் கொலை செய்தவர்களின் குடும்பத்துக்கு நிலத்தை அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நாய்சி என்ற இளம்பெண் தன் தந்தையைக் கொலை செய்தவரின் குடும்பத்துக்கு நிலத்தை அளித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

நாய்சி தந்தை மேத்தீவ் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். 2008-ம் ஆண்டு திடீரென மேத்தீவ் மாயமானார். காவல்துறையில் புகார் தெரிவித்தும் அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேத்தீவ் மாயமானதற்கு முதல்நாள் இரவு தன் நண்பர் அனிஷுடன் மது அருந்தியுள்ளார். இதற்கு அடுத்தநாள் மாயமானார்.

Representation image
Representation image

2016-ம் ஆண்டு போலி கரென்சி வழக்கு ஒன்றில் அனிஷ் கைதாகியுள்ளார். அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேத்தீவ் குறித்து கூறியுள்ளார். அவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேத்தீவைக் கொலை செய்து புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேத்தீவ் காணாமல் போனதாக நினைத்திருந்த குடும்பத்தினருக்கு இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, அனிஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அனிஷ் தன்னுடைய வீடு மற்றும் நிலங்களை அடமானம் வைத்து மேத்தீவிடம் பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கலில் இந்தக் கொலை நடந்ததாக அனிஷ் கூறியுள்ளார்.

மேத்தீவின் எதிர்பாராத இறப்பு குடும்பத்தை இக்கட்டான சுழலுக்கு தள்ளிவிட்டது. கடன் காரணமாக தங்களது சொத்துகளை மேத்தீவ் குடும்பத்தினர் விற்றுள்ளனர். அவரின் மூத்த மகள் நாய்சி பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அனிஷின் நிலத்தை அவரது குடும்பத்தினருக்குத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார் நாய்சி. 5 சென்ட் நிலத்தை அவரின் தந்தை வாசுவிடம் வழங்கியுள்ளார்.

Representation image
Representation image

தன் தந்தை மேத்தீவ் கொலையில் போலீஸுக்குத் துப்பு கொடுத்தது வாசுதான் என்ற தகவலை தற்போது நாய்சி கூறியுள்ளார். ``வாசு நல்ல மனிதர் தன் மகன் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதை உணர்ந்தும் இந்த உண்மையை வெளியில் சொன்னார். அனிஷ் செய்த குற்றத்துக்காக அவரது குடும்பத்தினருக்குத் தண்டனை வழங்கக் கூடாது. அவர்கள் தற்போது மோசமான சூழலில் வசித்து வருகிறார்கள் ” என நாய்சி கூறியுள்ளார்.

பின் செல்ல