Published:Updated:

`சம்பளமே 2 லட்சம்; அவருக்கு கார் கிஃப்டா?' - கேரள பட்டியலின எம்.பி-யை சுற்றும் புதிய சர்ச்சை!

ரம்யா ஹரிதாஸ்
ரம்யா ஹரிதாஸ்

சம்பளம் மட்டுமே 2 லட்சம் வரை வரும். இதுபோக படிகள் இருக்கிறது. எம்.பி-க்கு என்றால் வட்டியே வாங்காமல் வங்கியில் லோன் கொடுப்பார்கள்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் முக்கியமான நாடாளுமன்றத் தொகுதி ஆலத்தூர்.  இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. கடந்த 36 வருடங்களாக இந்தத் தொகுதியில் பிற கட்சியினர் வெற்றி பெற்றதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்தவர் ஓர் இளம் பெண். 32 வயதான ரம்யா ஹரிதாஸ் என்பவர்தான் அவர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிஜூவை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ரம்யா.

ரம்யா ஹரிதாஸ்
ரம்யா ஹரிதாஸ்

கேரளா மட்டுமல்ல, இந்தியாவே ரம்யாவை வியந்து பார்த்தது. கோழிக்கோட்டைச் சேர்ந்த ரம்யா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். வெற்றிக்குப் பின் சுறுசுறுப்பாகத் தனது பணிகளைக் கவனித்து வருகிறார். இருந்தாலும் அவரைச் சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டே இருக்கிறது. கேரளாவில் மழை பெய்துவருவதால் சமீபத்தில் நடவுப் பணிகள் நடந்தது. ரம்யாவும் தான் ஒரு எம்.பி என்பதை மறந்துவிட்டு விவசாயியாக மாறி தன் நிலத்தில் நாற்று நடும் பணிகளைத் தொடங்கினார். டிராக்டர் கொண்டு தன் நிலத்தைத் தானே உழுதார். பின்னர், சக தொழிலாளர்களுடன் சேர்ந்து ரம்யாவும் நாற்று நட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, பப்ளிசிட்டிக்காக இப்படி நடவு செய்கிறார் என வசைபாடினர்.

Vikatan

இதற்கிடையே, ஆலத்தூர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் ரம்யாவுக்காக கார் புக் செய்துள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து மொத்தம் 14 லட்சம் வசூல் செய்து அவருக்காக கார் புக் செய்துள்ளனர். அடுத்த மாதம் 9ம் தேதி இந்தக் காரை ரம்யாவுக்கு கொடுக்கவிருக்கிறார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. இந்த விவகாரத்திலும் தற்போது சர்ச்சைகளைச் சந்தித்துள்ளார் ரம்யா. இதற்குச் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ``ரம்யாவின் சம்பளம் மட்டுமே 2 லட்சம் வரை வரும். இதுபோக படிகள் இருக்கிறது. எம்.பி-க்கு என்றால் வட்டியே வாங்காமல் வங்கியில் லோன் கொடுப்பார்கள்.

ரம்யா ஹரிதாஸ்
ரம்யா ஹரிதாஸ்

அதில் கார் எடுக்கலாம். அதையெல்லாம் விடுத்து அப்பாவி இளைஞரிகளிடம் இருந்து பணம் வசூல் செய்து அவருக்கு கார் வழங்க வேண்டுமா?'' எனச் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இது சர்ச்சையாக மாற, ``எங்கள் எம்.பி. எங்களுக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நாங்கள் கொடுக்கும் காரில் வந்தால் எங்களுக்குப் பெருமை. இதற்காக நாங்கள் பொதுமக்களிடம் காசு வசூலிக்கவில்லை. கட்சிக்காரர்களாக எங்கள் பணத்தை கொடுத்து கார் வாங்கிக்கொடுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது" எனக் கூறியுள்ளனர் இளைஞர் காங்கிரஸார்.

இதுகுறித்து பேசியுள்ள ரம்யா, ``ஆலத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வரும்போது என்னிடம் இருந்தது வெறும் 3 ஜோடி உடுப்புகள் மட்டுமே. கையில் பணம் இல்லை. அப்படிப்பட்ட என்னை, இதே காங்கிரஸார் தான் தங்களுடைய பணத்தை கொடுத்து நான் ஜெயிக்க வேண்டும் என என்னை பிரசாரம் செய்ய வைத்ததுடன், வெற்றிபெறவும் வைத்தனர். ஆலத்தூர் மக்களுக்காக உழைக்க இளைஞர் காங்கிரஸார் கார் வாங்கித் தருவதில் எனக்குப் பெருமை தான். பேஸ்புக் பதிவு பார்த்த பின்பே இந்த விவரம் எனக்குத் தெரியவந்தது. இதில் விமர்சனம் எதற்காக வருகிறது, கட்சிக்குள் நடக்கும் விஷயத்தை மற்றவர்கள் ஏன் விவாதம் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இளைஞர் காங்கிரஸ்
இளைஞர் காங்கிரஸ்

நானும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் தான். இளைஞர் காங்கிரஸில் இருக்கும் எனக்காக என் சக உறுப்பினர்களே உதவுவதை நினைக்கும்போது மிகுந்த சந்தோசம்.  எனக்காக என் கட்சிக்காரர்கள் வாங்கித்தந்த கார் என்று இனி நான் போகும் இடம் எல்லாம் பெருமையுடன் சொல்வேன்" எனக் கூறியுள்ளார். ரம்யாவின் தந்தை சாதாரண கூலித் தொழிலாளி, தாயார் டெய்லர். இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அளித்த இலவச வீட்டில் வசித்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.பி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு