Published:Updated:

`தண்ணீர் இல்லாமல் தவித்த ஊர் மக்கள்! - ஊரடங்கில் கிணறு தோண்டி அசத்திய இளைஞர்கள்

தோண்டப்பட்ட கிணறு
தோண்டப்பட்ட கிணறு

அந்தப் பகுதியில் ஒரு கிணறு மட்டுமே இருந்ததால் கோடைக் காலத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவியது. ஊரடங்கு காலத்தை உபயோகமாகப் பயன்படுத்தி பிறருக்கு நல்லது செய்ய கிராமத்து இளைஞர்கள் முடிவெடுத்தார்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதுடன், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. ஏராளமானோர் வேலை இழக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது.

ஊரடங்கு நேரம்... ஒரு குடும்பத்தின் முயற்சியில்
உருவானது ஒரு கிணறு! - பீனா

ஆனாலும், கொரோனா ஊரடங்கு பலருக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இருப்பதைக் கொண்டு வாழ்வது, பிறருக்கு உதவுதல், பேரிடர் காலத்து அச்சம் என்பது உட்பட பலவிதமான படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது.

கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்... விரிவான அலசல்!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலாற்றூர் என்ற நகரத்தின் எடப்பட்டா என்ற பகுதியைச் சேர்ந்த மக்களுக்குக் கொரோனா ஊரடங்கு மூலம் அவர்களின் நீண்ட காலக் கனவான, புதிய கிணறு வெட்டும் திட்டம் நிறைவேறியிருக்கிறது. 

கிணறு தோண்டும் இளைஞர்கள்
கிணறு தோண்டும் இளைஞர்கள்

வெள்ளியாறு நதியின் கரையில் இருக்கும் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்த யூத் சாரிட்டபிள் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சம்சுதீன் என்பவரின் வீட்டு முற்றத்தில் புதிய கிணறு தோண்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் மட்டுமே கிணறு உள்ளது. அங்குள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அந்தக் கிணற்றிலேயே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதால், கோடைக்காலங்களில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். பல சமயங்களில் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. 

ஊரடங்கு காலத்தில் இளைஞர்களின் முயற்சி
ஊரடங்கு காலத்தில் இளைஞர்களின் முயற்சி

அதனால் சம்சுதீனுக்குச் சொந்தமாகக் கிணறு தோண்ட வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. ஆனால் அது நீண்டநாள் கனவாக இருந்ததே தவிர அவராலும் அவரது குடும்பத்தினராலும் கிணறு தோண்ட முடியவில்லை. பொருளாதாரச் சூழ்நிலை ஒருபக்கம் இருந்தாலும் அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கான காலஅவகாசமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

மேலாற்றூர் யூத் சாரிட்டபிள் சொசைட்டியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சம்சுதீனின் நீண்டநாள் எதிர்பார்ப்பு குறித்துத் தெரியவந்ததும் தாங்களே களத்தில் அவரது வீட்டின் முற்றத்தில் இறங்கி கிணறு தோண்டத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் உதவிக்கு ஓடோடி வந்தார்கள் 

தோண்டப்பட்ட கிணறு
தோண்டப்பட்ட கிணறு

சம்சுதீன் அவரது தந்தை உமர் ஆகியோரும் பணியில் இணைத்துக் கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து கிணறு தோண்டத் தொடங்கிய நிலையில், அதில் உள்ள ஊற்றிலிருந்து தண்ணீர் வந்ததும் எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்தப் பணியைச் செய்தது பற்றி மேலாற்றூர் சாரிட்டபிள் சொசைட்டியின் செயலாளரான பி.சாபீர் கூறுகையில், “பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை எங்கள் அமைப்பின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக வைத்துள்ளோம். அதை நிறைவேற்றும் வகையிலேயே கிணறு தோண்டிக் கொடுத்துள்ளோம்.

சாரிட்டபிள் அமைப்பின் செயலாளர் சாபீர்
சாரிட்டபிள் அமைப்பின் செயலாளர் சாபீர்

ஊரடங்கு காலத்தில் யாருக்காவது நல்லது செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசித்தபோது சம்சுதீன் வீட்டில் கிணறு இல்லாததால் கஷ்டப்படுவது பற்றித் தெரியவந்தது. உடனடியாகக் களமிறங்கி கிணறு தோண்டிக் கொடுத்தோம். அதில் தண்ணீர் வருவது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கொரோனா ஊரடங்கு எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவைக் கொடுத்திருக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு