Published:Updated:

`கை கால்களைக் கட்டிக்கொண்டு இங்கிலீஷ் கால்வாயில் நீச்சல்!'-குமரியில் முன்னோட்டம்பார்த்த கேரள இளைஞர்

நீச்சல் வீரர் ரதீஷ்குமார்
நீச்சல் வீரர் ரதீஷ்குமார்

லண்டன் இங்கிலீஷ் கால்வாயை கை, கால்களைக் கட்டிக்கொண்டு நீந்திக் கடக்க உள்ளேன். 16 டிகிரி குளிர்ந்த நீரான இங்லீஷ் கால்வாய் 34 கிலோ மீட்டர் நீளமாகும்.

சுவாமி விவேகானந்தரின் 157-வது பிறந்தநாள், இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று மலரஞ்சலி செலுத்தினர். அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ரதீஷ்குமார் (31) என்ற நீச்சல் வீரர், கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறையிலிருந்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை 800 மீட்டர் தூரத்துக்கு கடலில் கை, கால்களைக் கட்டி நீந்திச்சென்று சாகசம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

கடலில் நீந்தும் ரதீஷ்குமார்
கடலில் நீந்தும் ரதீஷ்குமார்

இதையடுத்து, பூம்புகார் படகுத்துறைக்குச் சென்ற ரதீஷ்குமார் நீச்சல் உடையை மாற்றினார். பின்னர், படகுத் துறையிலிருந்து தனியார் படகில் சிறிதுதூரம் சென்றார். அப்போது, ரதீஷ்குமாரின் கை, கால்களை ஒருவர் கயிற்றால் கட்டினார். உடனே கடலில் குதித்த ரதீஷ்குமார், டால்பின் போல வேகமாக நீந்தத் தொடங்கினார். 800 மீட்டர் தூரமுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை, சுமார் அரை மணி நேரத்தில் நீந்திக் கடந்தார். நீந்தும்போது, அவரது பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்புக் குழும இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீஸார் ஏக்நாத் ஆகியோர், படகில் பின்தொடர்ந்து சென்றனர்.

Vikatan

பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்ற அவரை ஐயப்பா சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். கை, கால்களை அவிழ்த்த அவர், விவேகானந்தர் உருவச்சிலை முன்பு மலரஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து ரதீஷ்குமார் கூறுகையில், "கேரள சுற்றுலாத்துறையில், கடலில் சிக்குபவர்களைக் காக்கும் லைஃப் கார்ட் பணியில் இருக்கிறேன். கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சல் அடிப்பது எனது ஸ்டைல். அப்படி நீந்தி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.

கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன
கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன

அதற்காக, லண்டன் இங்கிலீஷ் கால்வாயை கை, கால்களைக் கட்டிக்கொண்டு நீந்திக் கடக்க உள்ளேன். 16 டிகிரி குளிர்ந்த இங்கிலீஷ் கால்வாய், 34 கிலோ மீட்டர் நீளமாகும். அந்தக் கால்வாயை கை, கால்களை கட்டிக்கொண்டு டால்பின் போன்று நீந்திக் கடப்பதற்கான பயிற்சியில் இந்த ஆண்டு சேர உள்ளேன். ஆறு மாத பயிற்சிக்குப்பின், இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடப்பேன். விரைவில் எனது லட்சியம் நிறைவேறும்.

அதன் முன்னோட்டமாகவே, கன்னியாகுமரி கடலில் 800 மீட்டர் தொலைவை கை, கால்களைக் கட்டிக்கொண்டு நீந்திக் கடந்துள்ளேன். மேலும், கின்னஸ் சாதனை படைப்பதற்காக சுவாமி விவேகானந்தரின் ஆசியையும் வேண்டியுள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு