Published:Updated:

`என்னிடம் பணமில்லை; வெள்ள நிவாரணத்துக்கு ஸ்கூட்டரை விற்றுவிட்டேன்!'- நெகிழவைத்த கேரள வாலிபர்

கலிலுல்லா.ச

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் விரும்பி வாங்கிய இருசக்கர வாகனத்தை விற்று வெள்ள நிவாரண நிதி வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதி
ஆதி

கேரளாவை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது வெள்ளம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்குப் பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம்
வெள்ளம்

இதனிடையே ஆதி, தான் பணத்தை சிறுகச் சிறுக சேமித்து ஆசையாக ஸ்கூட்டர் வாங்கியிருந்தார். அவர் வாங்கி ஒரு வருடம் இருக்கும். இதுவரை 3,000 கி.மீட்டர் மட்டுமே அந்த வாகனம் ஓடியுள்ளது. 69,000 ரூபாய்க்கு தான் வாங்கிய இருசக்கர வாகனத்தை தனது அண்டை வீட்டாரிடம் 40,000-க்கு விற்றுள்ளார். ஆனால், ஆதிக்கு இப்படி அவசரமாக விற்க காரணம் ஒன்று இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மழையால் வீடுகளை இழந்த குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பதுதான் அது.

கடந்தாண்டு வெள்ளத்தில் மக்களுக்கு உதவியதைப்போலவே இந்த ஆண்டும் உதவ வேண்டும் என்று எண்ணிய அவர் தனது வண்டியை விற்கத் துணிந்துள்ளார். அவரின் நண்பர்கள், `வண்டியை விற்கவேண்டாம்’ என்று கூற, அதற்கு ஆதி, ``என்னிடம் கார் உள்ளது; அப்படியிருக்கும்போது, வண்டியை விற்பது ஒன்றும் பெரியவிஷமில்லை” என்று பதிலளித்துள்ளார். ஆதி, தன்னால் இயன்ற அளவு, பல்வேறு வழிகளில் வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டியுள்ளார்.

ஸ்கூட்டர்
ஸ்கூட்டர்

கிராபிக்ஸ் டிசைனரான ஆதி, தான் செய்யும் தொழில் மூலம் வரும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு ஆதி நடத்திய பல்வேறு இயக்கங்கள் மூலம் 50,000 நிதியை திரட்டியுள்ளார். ஆதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``எனக்கு மாதச் சம்பளம் இல்லை; என்னிடம் மிதமிஞ்சிய பணமில்லை. என்னிடம் இருந்த ஸ்கூட்டரை விற்று அதில் வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.