Published:Updated:

`கடைசியா அப்பா முகத்தைக்கூட பார்க்க முடியலையே..! - கொரோனா வார்டில் அட்மிட்டான கேரள இளைஞர் கண்ணீர்

கொரோனா வார்டில் இருக்கும் லினோ அபேல்
கொரோனா வார்டில் இருக்கும் லினோ அபேல்

`இப்போது தனி வார்டில் எனது நெகட்டிவ் ரிசல்ட் வருவதற்காகக் காத்திருக்கிறேன். ஒருவேளை பரிசோதனை முடிவு நெகட்டீவ் ஆக இருந்தால் எனக்கு பெரிய சங்கடமாக அமையும்.'

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஆபேல் ஜோசப் என்பவர் தூங்கிக்கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரைக் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் இறந்துவிட்டார். ஆபேல் ஜோசப்பின் மகன் லினோ ஆபேல், கத்தார் நாட்டில் இருந்து கோட்டயம் வந்தார். வெளிநாட்டில் இருந்து வந்ததால் தந்தை அட்மிட் ஆகியிருந்த கோட்டயம் மெடிக்கல் காலேஜில் கொரோனா தொற்று இருக்கிறதா எனச் சோதனை செய்ய சென்றார். அங்கு தனிவார்டில் அவர் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் தந்தை இறந்துபோனதால் அவரது முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் லினோ ஆபேல். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதால் தனது சோகத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு இப்போது வைரலாகிவருகிறது.

ஆபேல் ஜோசப்
ஆபேல் ஜோசப்

`மிஸ் யூ அச்சா...' எனத் தொடங்கும் அந்தப் பதிவில், ``மார்ச் 7-ம் தேதி காலையில் என் சகோதரன் உடனே அழைக்குமாறு மெசேஜ் அனுப்பினான். நான், உடனே போனில் அழைத்தபோதுதான் என் தந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. மோசமான நிலை என்பதால் தொடுபுழா மருத்துவமனையில் இருந்து கோட்டயம் மெடிக்கல் காலேஜுக்கு மாற்றப்படுவதாகச் சொன்னார்கள். பின்னர், அழைத்தபோது அவர் அவசர வார்டில் இருப்பதாகச் சொன்னார்கள்.

இதுபற்றி கத்தாரில் நான் வேலைசெய்யும் நிறுவன அதிகாரிகளிடம் கூறினேன். உடனே நான் ஊருக்குச் செல்வதற்காக டிக்கெட் எடுத்துத் தந்தார். ஊரில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு போக முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் நான் கத்தார் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றேன். 7-ம் தேதி இரவு புறப்பட்டு 8-ம் தேதி காலையில் கொச்சி விமான நிலையம் சென்றடைந்தேன். நான் கத்தாரிலிருந்து வரும்போதே மாஸ்க் அணிந்திருந்தேன், தொடுபுழாவுக்கு வந்த பிறகும் மாஸ்க் வாங்கி அணிந்தேன். பின்னர் கோட்டயம் சென்றேன், அங்கு என் சகோதரனிடம் பேசினேன். அப்பா வெண்டிலேசனில் இருந்ததால் அவரைப் பார்க்கவில்லை.

லினோ ஆபேல்
லினோ ஆபேல்

எனக்கு லேசான இருமல் இருந்ததால் உள்ளுக்குள் சின்ன பயம் ஏற்பட்டது. என்னால் யாருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் கொரோனா பிரிவுக்குச் சென்றேன். அவர்கள் என்னை தனி வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவு 10.30 மணிக்கு என் தந்தை இறந்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள். நான் அட்மிட் ஆகியிருக்கும் அறைக்கு அடுத்த அறையில் கிடக்கும் அவரது முகத்தைப் பார்க்க அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார்கள். அப்பாவின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸை மட்டுமே ஜன்னல் வழியாகப் பார்க்க முடிந்தது. ஒருவேளை நான் கொரோனா பரிசோதனைக்காக வராமல் இருந்திருந்தால், என் அப்பாவின் முகத்தைப் பார்த்திருக்கலாமே.

`காற்றில் 3 மணி நேரம்;  பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!' - ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்

இப்போது தனி வார்டின் எனது நெகட்டிவ் ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறேன். ஒருவேளை பரிசோதனை முடிவு நெகட்டீவ் ஆக இருந்தால் எனக்கு பெரிய சங்கடமாக அமையும்" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு