Published:Updated:

`பேப்பர் வாங்கக்கூட பணம் இருந்ததில்லை..!' -கேரளாவின் முதல் பழங்குடி இன கலெக்டரான ஸ்ரீதன்யா

பயிற்சி கலெக்டர் ஸ்ரீதன்யா
பயிற்சி கலெக்டர் ஸ்ரீதன்யா

ஸ்ரீதன்யாவின் தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். ஓர் அக்கா, ஒரு தம்பியுடன் பிறந்த பழங்குடி இனப் பெண்ணான அவருக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவை, அங்கு சப்-கலெக்டர் பொறுப்பில் இருந்த சீரம் சாம்பசிவ ராவ் ஏற்படுத்தினார்.  

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சில பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதுதான் கல்வியின் பலனை அடையத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாகப் பெண்கள் கல்வித் துறையில் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

`15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி’ - கேரளா வழியில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் உ.பி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீதன்யா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண், ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார். 26 வயது நிரம்பிய ஸ்ரீதன்யா கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 410-வது இடம் பிடித்தார்.

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

ஸ்ரீதன்யாவின் வெற்றி சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. கடின உழைப்பும் விடா முயற்சியுமே அவரை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளது. குரிசியா என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரான அவரின் தந்தை சுரேஷ், தாய் கமலா ஆகியோர் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருபவர்கள். 

குடும்பத்தினருடன் ஸ்ரீதன்யா
குடும்பத்தினருடன் ஸ்ரீதன்யா
courtesy: online manorama

ஸ்ரீதன்யாவின் அக்கா சுஷிதா, ஒட்டபாலம் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். அவரின் தம்பி ஸ்ரீராக், பாலிடெக்னிக் படித்து வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ரீதன்யாவுக்கு உயிரியல் பாடத்தில் விருப்பம் அதிகம் என்பதால் கோழிக்கோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் போலீஸ் வேலையில் சேர்ந்தார். காவல்துறைப் பணி அவருக்குப் பிடிக்காததால் அதிலிருந்து விலகினார். பின்னர் வயநாடு பகுதியில் உள்ள ஆதிவாசி குழந்தைகளுக்கான ஹாஸ்டலில் வார்டன் வேலையில் சேர்ந்தார். சிறிது காலத்திலேயே அந்த வேலையும் பிடிக்காமல் போனதால் விலகினார்.

ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஸ்ரீதன்யா
ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஸ்ரீதன்யா

பின்னர், கேரள அரசின் பழங்குடியின மேம்பாட்டுத் துறையில் அவருக்கு கிளார்க் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள் அந்த வேலையில் அவர் ஆர்வத்துடன் பணியாற்றினார். அந்தச் சமயத்தில், சப்-கலெக்டராக இருந்த சீரம் சாம்பசிவ ராவ் அவருக்கு உந்துதலாக இருந்தார். சப்-கலெக்டருக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தப் பதவிக்கான பொறுப்புகளும் கடமைகளும் அவரைப் பிரமிக்க வைத்தன.

சப்-கலெக்டர் சீரம் சாம்பசிவ ராவ் போன்று தானும் ஒருநாள் கலெக்டராக வேண்டும் என்கிற லட்சியமும் கனவும் அவருக்கு ஏற்பட்டது. இது பற்றி சப்-கலெக்டரிடமே அவர் தெரிவித்தார். அவரது சிந்தனை, அதைச் செயல்படுத்தும் மனவலிமை ஆகியவற்றைப் பார்த்து வியந்த சப்-கலெக்டர் சாம்பசிவ ராவ், அவரை திருவனந்தபுரம் சென்று பயிற்சி மையத்தில் சேர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராக வழிகாட்டினார். 

லட்சியத்தை வென்ற மகிழ்ச்சி
லட்சியத்தை வென்ற மகிழ்ச்சி

ஐ.ஏ.எஸ் லட்சியத்துடன் தன்னைத் தயார் செய்துவந்த ஸ்ரீதன்யா, இரண்டாவது முறையாக எழுதிய தேர்விலேயே வெற்றி பெற்றார். 577 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 759 பேர் தேர்வானதில் ஸ்ரீதன்யா 410-வது இடம் பிடித்தார். அதன் மூலம் வயநாடு மாவட்டத்திலிருந்து தேர்வாகும் முதல் ஐ.ஏ.எஸ் என்ற பெருமை பெற்றார்.

தேர்வில் வெற்றி பெற்ற அவர் டெல்லியில் நடந்த நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால், அதற்கான பணம் அவரிடம் இல்லை. அவரது குடும்பத்தில் யாரிடமும் பணம் இல்லை என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தார். அப்போது அவரின் தோழிகள் சிலர் சேர்ந்து 40,000 ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 

ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தபோது பேப்பர் வாங்கக் கூட அவரிடம் பணம் கிடையாது. மனதில் லட்சியத்தை மட்டுமே வைத்திருந்தார்.
ஸ்ரீதன்யாவின் தோழி

அந்தப் பணத்துடன் சென்ற அவர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றார். ``ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்து வந்த காலத்தில் அவரிடம் பேப்பர் வாங்கக் கூட பணம் இருந்ததில்லை. சில புத்தகங்களை வாங்க அவரிடம் பணம் இல்லாததால் லைப்ரரி சென்று படிப்பார்” என்கிறார்கள், அவரின் தோழிகள்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் ஸ்ரீதன்யா வெற்றி பெற்றதை அறிந்ததும், வயநாடு தொகுதியின் எம்.பி-யும் காங்கிரஸ் நிர்வாகியுமான ராகுல்காந்தி அவரை வாழ்த்தியும் பாராட்டியும் ட்வீட் செய்தார். கேரள முதல்வர் பினராய் விஜயனும் பாராட்டினார். 

ராகுல்காந்தி பாராட்டு
ராகுல்காந்தி பாராட்டு

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்று தேர்வான ஸ்ரீதன்யாவுக்கு தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் பயிற்சிக் கலெக்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாமில் இருந்து திரும்பிய அவர், கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்பார் என கோழிக்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீதன்யா யாரைத் தனது ரோல் மாடலாக கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தாயாரானாரோ அதே, சீரம் சாம்பசிவ ராவ், தற்போது கோழிக்கோடு மாவட்ட கலெக்டராக இருக்கிறார். அவருக்குக் கீழ் பயிற்சி கலெக்டராக பணியில் சேர இருப்பதைப் பெருமைக்குரியதாக அவர் கருதுகிறார்.

ஸ்ரீதன்யா ஐ.ஏ.எஸ்
ஸ்ரீதன்யா ஐ.ஏ.எஸ்

``பின் தங்கிய பகுதியிலிருந்து நான் இந்தப் பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் எங்கள் பகுதியைச் சேர்ந்த பலரும் இதேபோல உயர் பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தைப் பெறுவார்கள். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார், ஸ்ரீதன்யா. 

ஸ்ரீதன்யா, ஐ.ஏ.எஸ் ஆக பொறுப்பேற்க இருப்பதால் அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிராமமே அவரைப் பாராட்டி மகிழ்வதுதான் கூடுதல் சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு