கேரளா: கிரையோஜெனிக் இன்ஜின் பொய் வழக்கு - நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு!

போலீஸின் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மென்ட் அக்கவுன்ட்டிலிருந்து விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது.
மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை 1994-ம் ஆண்டு கேரளா போலீஸ், திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தது. அவரிடமிருந்து இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் இன்ஜின்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிரையோஜெனிக் இன்ஜின் ரகசியங்களை விற்றதாக கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைப்பு திட்டத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், கிரையோஜெனிக் இன்ஜின் திட்ட இணை இயக்குநர் சசிக்குமரன், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா, மரியம் ரஷீதாவின் தோழி மாலத்தீவைச் சேர்ந்த ஃபவுசியா ஹஸன் (Fousiya Hasan) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் காரணமாக கேரளாவில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் கருணாகரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. விசாரணை முடிவில், `இது கேரள போலீஸின் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு’ என்று 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. சி.பி.ஐ அறிக்கையைத் தொடர்ந்து நம்பி நாராயணன் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழகில் நம்பி நாராயணன் சுமார் ஐம்பது நாள்கள் சிறையில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து விஞ்ஞானி நம்பி நாராயணன் மானநஷ்ட ஈடு கேட்டு திருவனந்தபுரம் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ விசாரணை முடிந்த பிறகும், இந்த வழக்கை நம்பி நாராயணன் வாபஸ் வாங்கவில்லை. இதற்கிடையில், `விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு 50,00,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், `மனித உரிமை கமிஷன் 10,00,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்தத் தொகைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன.

இருப்பினும் திருவனந்தபுரம் சப் கோர்ட்டில் நம்பி நாராயணன் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, கேரள அரசின் முன்னாள் செயலர் ஜெயக்குமார் தலைமையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1.3 கோடி ரூபாய் நம்பி நாராயணனுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி போலீஸின் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மென்ட் அக்கவுன்ட்டிலிருந்து விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது.