Published:Updated:

`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?

சந்திரபாபு நாயுடு - ஜெகன் ரெட்டி
சந்திரபாபு நாயுடு - ஜெகன் ரெட்டி

ஆந்திராவில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைத்து வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் தொழிற்சாலையை அங்கிருந்து தமிழகத்துக்கு மாற்ற ஆலோசனை நடத்திவருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு மோதல்!

ஆந்திராவின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே நீண்ட நாள்களாகவே பெரும் போர் நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு நிறைய பிரச்னைகள் கொடுத்தார். அதேபோல் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி வருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இதன் ஒரு பகுதியாக முந்தைய சந்திரபாபு நாயுடு அரசால், ஆந்திராவுக்குக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் அவர் வழங்கிய அனுமதி, ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்து வருகிறார் ஜெகன் ரெட்டி. மேலும், சந்திரபாபு நாயுடுவின் பல்வேறு முடிவுகளும் தற்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஜெகனின் இந்தச் செயலால் தங்கள் தொழிற்சாலையை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மாற்ற ஆலோசனை நடத்தி வருகிறது உலக புகழ்பெற்ற கியா மோட்டார்ஸ் நிறுவனம்.

`அன்றே எச்சரித்த ஜெகன்மோகன் ரெட்டி!' - சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்?

ஆந்திராவில் கியா மோட்டார்ஸ்!

தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக பிரசித்திபெற்ற வாகன உற்பத்தி நிறுவனம் கியா மோட்டார்ஸ். கடந்த 2017-ம் ஆண்டு ஆந்திராவில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு, சுமார் 23 மில்லியன் சதுர அடி பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்றன. சுமார் இரண்டு ஆண்டுக்கால கட்டுமான பணிகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இங்கு வாகன உற்பத்திகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆந்திர தொழிற்சாலை
ஆந்திர தொழிற்சாலை

இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்திய பயன்பாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் அமைந்துள்ள கியா மோட்டார்ஸ், உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரும் தொழிற்சாலையாக உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 3,00,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

தற்போதைய பிரச்னை!

கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் நிலை இப்படி இருக்க, கடந்த வருடம் ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘இனி ஆந்திராவில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 75% பணியை மாநிலத்தின் உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இதனால் தங்களுக்குத் தேவையான வேலையாட்களை நியமிக்க முடியாமல் கியா மோட்டார்ஸ் நிறுவனம் திணறி வந்தது.

கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ்

இதற்கு அடுத்தபடியான கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முந்தைய அரசு, மின்சாரக் கட்டணம், வரிகள், நில கட்டணங்கள் போன்றவற்றுக்குச் சலுகை வழங்கியிருந்தது. ஆனால், தற்போதைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு கியா நிறுவனம் உட்படப் பல வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வருகிறது. ஜெகனின் இந்த நடவடிக்கை கியா மோட்டார்ஸுக்கு இன்னும் சிக்கலை அதிகரித்துள்ளது. எனவேதான் ஆந்திராவில் உள்ள தங்கள் நிறுவனத்தை அண்டை மாநிலமான தமிழகத்துக்கு மாற்ற ஆலோசனை நடைபெற்று வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு..! என்னதான் நடக்கிறது ஆந்திராவில்?!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களும் தமிழகத்தில் இருந்துதான் ஆந்திராவுக்குச் செல்கின்றன. அதனால் தங்கள் தொழிற்சாலையையும் ஒரே அடியாகத் தமிழகத்துக்கு மாற்றலாம் என்ற எண்ணத்தில் கியா நிறுவனம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும் இது தொடர்பாக அந்நிறுவனத் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ``தற்போது இருக்கும் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றும் எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையையும் அவர்கள் மறுக்கவில்லை.

தமிழக அரசு
தமிழக அரசு

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் செயலாளர்கள் அளவிலான கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் முடிவிலேயே கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்துக்குள் நுழையுமா என்பது பற்றி விரிவான தகவல்கள் வெளிவரும். கியா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஹுண்டாய் மோட்டார்ஸ் மூலம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அலுவலகமும் ஆந்திர முதல்வர் அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள அவ்வளவு பெரிய தொழிற்சாலையை உடனடியாக வேறு மாநிலத்துக்கு மாற்றுவது பெரும் சவாலான விஷயம். அதிலும் தொழிற்சாலை செயல்படத் தொடங்கிய அடுத்த இரண்டு மாதத்திலேயே இதைச் செய்வது முடியாத காரியம். கியா மோட்டாஸ் நிறுவனம் தமிழகத்துக்கு வந்தால் இங்குள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு