Published:Updated:

புதுச்சேரி: `துணைநிலை ஆளுநரை மாற்றும் விவகாரம்!’ - என்ன சொல்கிறார் கிரண் பேடி?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண் பேடி மத்திய அமைச்சராகிறார் என்றும் அவருக்குப் பதிலாக ராஜ்யசபா எம்.பியான இல.கணேசன் புதுச்சேரியின் கவர்னராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு கிரண் பேடியின் பதில் இதுதான்.

புதுச்சேரி மாநிலத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. யார் முதல்வர் இங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக்கொள்ளாத குறையாகப் போட்டி போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், கிரண் பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக அறிவித்தது மத்திய பி.ஜே.பி அரசு. வந்த வேகத்தில் ஆளுநராகப் பதவியைக் கூட ஏற்காத கிரண் பேடி, அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்த செய்வதறியாமல் விழித்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இல. கணேசன்
இல. கணேசன்

மேலும் மக்கள் பிரதிநிதிகள் சைரன் வைத்த வாகனங்களில் செல்லக் கூடாது என்று அடுத்தடுத்த அஸ்திரங்களை வீசினார் கிரண் பேடி. தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற நாராயணசாமி, ``ஆளுநருடன் எங்களுக்கு எந்தவிதமான மோதல் போக்குகளும் ஏற்படாது. நான் அரசு வாகனத்திலேயே செல்லப் போவதில்லை” என்று பேட்டி கொடுத்தார். ஆனால், அதற்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே நடந்தவை அனைத்தும் குழாயடிச் சண்டையை விஞ்சியவை.

ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையே அதிகார மோதல் வலுக்கும்போதெல்லாம், கிரண் பேடியைத் திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய உள்துறையிடம் முறையிடுவார்கள் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள். அப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது ஆட்சி முடிய 10 மாதங்களே இருக்கும் நிலையில், துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி மத்திய அமைச்சாகிறார் என்றும் கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாடு முழுவதற்கும் நிரல் மேலாண்மை அமைப்பின் தொடர்பாளராக இருப்பார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இல. கணேசன் முகநூல் பதிவு
இல. கணேசன் முகநூல் பதிவு

மேலும் அவருக்குப் பதிலாக பி.ஜே.பி-யின் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் இல.கணேசன் புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் சில தினங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இல.கணேசன் எம்.பி தனது முகநூலில், ``எதுவும் அதிகாரபூர்வமாக வரவில்லை. தொடர்ந்து வாழ்த்துகள் வந்துகொண்டிருக்கின்றன. உறுதியான செய்தி வந்தவுடன் பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் அந்தப் பதிவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.

புதுச்சேரி: `மனநல மருத்துவமனையை அணுகலாம்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு கிரண் பேடி பதிலடி

இந்தத் தகவல்கள் குறித்து கிரண் பேடியின் கருத்தறிய வாட்ஸ்-அப் மூலம் அவரை தொடர்புகொண்டபோது, ``கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்” (Only God knows best) என்று பதிலளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு