Published:Updated:

`12 விநாடிகள்தான்; ட்ரோனுக்குத் தடை!' - தகர்க்கப்படும் கொச்சி அடுக்குமாடிக் குடியிருப்புகள்

பிளாட்டுகள் தகர்க்கும் பகுதிகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்கவிடத் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி ட்ரோன் பறக்கவிட்டால், அவை சுட்டு வீழ்த்தப்படும் என போலீஸார் அறிவித்திருக்கிறார்கள்.

இன்று காலை தகர்க்கப்பட உள்ள ஹோலி ஃபெய்த் பிளாட்
இன்று காலை தகர்க்கப்பட உள்ள ஹோலி ஃபெய்த் பிளாட்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மரட் நகராட்சியில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள நான்கு பிளாட்டுகளில் அமைந்துள்ள ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்ஃப ஷெரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் சுப்ரீம் கோர்ட் வரைச் சென்றும் பலனில்லை. கேரளா இனி ஒரு மழை வெள்ள அழிவைத் தாங்காது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

மரட் பிளாட்டுகள்
மரட் பிளாட்டுகள்

பிளாட்டுகளில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்பதால் அதற்கான இழப்பீட்டைத் தரவேண்டும் எனக் குடியிருப்புவாசிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். பலகட்ட போராட்டங்கள், மாநில அரசின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்றும் (ஜன.11), நாளையும் நான்கு பிளாட்டுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளன. பிளாட்டுகளைத் தகர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சைரன், தீயணைப்பு ஒத்திகைகள் பார்க்கப்பட்டுவிட்டன.

இன்று காலை 11 மணிக்கு இரண்டு பிளாட்டுகளும், நாளை மதியம் 2 மணிக்கு இரண்டு பிளாட்டுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளன. இதற்காக அனைத்து பிளாட்டுகளிலும் உள்ள ஜன்னல், கதவுகள், இரும்பு கிரில்கள், பைப்புகள் என அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் அந்த பிளாட்டுகளைச் சுற்றியுள்ள சுமார் 12 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளாட்டுகளை வெடிவைத்து தகர்ப்பதால் தங்கள் வீடுகள் சேதமடையும் என பிளாட்டுகளைச் சுற்றிக் குடியிருப்பவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு இன்ஷூரன்ஸ் போடப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்தால் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே
கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே

அடுக்குமாடிக் குடியிருப்புகள் தகர்க்கப்படுவதைத் தொடர்ந்து அந்தக் கட்டடங்களைச் சுற்றி 200 மீட்டருக்கு இன்று காலை முதல் நாளை மாலை வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலையே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். வெடிபொருள்கள் கதிர் வீச்சு காரணமாக வெடிக்கும் என்பதால் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும் அந்தப் பகுதியில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே கூறுகையில், ``பிளாட்டுகளைத் தகர்ப்பதற்கு முன்பாக மரட்டில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. பிளாட்டுகள் தகர்க்கும் பகுதிகளுக்கு மேல் ட்ரோன் கேமராக்கள் பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படும்” என்றார்.

ட்ரோன்
ட்ரோன்

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு நிறக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளாட்டுக்கு முன்பும் 800 போலீஸார் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு முதல் சைரன் ஒலிக்கப்படும். அதைத்தொடர்ந்து வெடிமருந்தை வெடிக்க வைப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னதாகவும், கட்டடம் தகர்க்கப்பட்டு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகும் சைரன் ஒலிக்கப்படும். கட்டடம் தகர்க்கப்படுவதால் ஏற்படும் புழுதியைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடிப்பார்கள்.

`சாப்பிடவே கூடாத சிப்பியை வாங்குகிறார்கள்!’ - கொச்சி விபரீதம்

இன்று காலை 11 மணிக்கு ஹோலி ஃபெய்த் பிளாட் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்ஃப ஷெரின் டவர்ஸ் தகர்க்கப்படுகிறது. நாளை ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய அடுக்குமாடிகள் தகர்க்கப்படுகின்றன. ஒரு பிளாட்டைத் தகர்க்க வெறும் 12 விநாடிகள்தான் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அடுக்குமாடிக் குடியிருப்புகள் தகர்க்கப்படுவது கேரளத்தில் முதன்முறை ஆகும்.

இந்தநிலையில், ஹோலி ஃபெய்த் அடுக்குமாடிக் குடியிருப்பு காலை 11 மணியளவில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. 9 விநாடிகளில் அடிக்குமாடிக் குடியிருப்பு தரைமட்டமானது.