Published:Updated:

`7,200 டன் கழிவுகள்; 70 நாள் பணி!' - இரண்டாவது நாளாக வெடிவைத்துத் தகர்க்கப்படும் கேரள பிளாட்டுகள்

16 அடுக்குமாடிகள் கொண்ட ஜெயின் கோரல்கேவ் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

வெடிவைத்து தர்க்கப்பட்ட பிளாட்
வெடிவைத்து தர்க்கப்பட்ட பிளாட்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி ஃபெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்ஃபா ஷெரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்றுமுதல் இந்த ஃபிளாட்டுகளை வெடிவைத்து தகர்க்கும் பணி தொடங்கியது.

பிளாட்
பிளாட்

நேற்று முதற்கட்டமாக ஹோலி ஃபெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்ஃபாஷெரின் டவர்ஸ் ஆகியவை வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு மூன்றாவது கட்டடமான 16 அடுக்குமாடிகள் கொண்ட ஜெயின் கோரல்கேவ் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 2 மணியளவில் கோல்டன் காயலோரம் ஃபிளாட்டும் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதற்கு வெறும் 15 கிலோ வெடிமருந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த வெடிபொருள் மூலம் இந்த ஃபிளாட் தகர்க்கப்பட்டது. கோல்டன் காயலோரம் ஃபிளாட் முன்பக்கம் 10 அடுக்குமாடியும், பின்பக்கம் 16 அடுக்குமாடிகளும் கொண்டது. இந்தக் கட்டடத்தையொட்டியுள்ள 45 வீடுகளில் உள்ள 200-க்கும் அதிகமான மக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

மரட் பிளாட்டுகள்
மரட் பிளாட்டுகள்

கோல்டன் காயலோரம் கட்டடம் அருகே ஒரு அங்கன்வாடி உள்ளது. அங்கன்வாடிக்கும் அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஃபிளாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் கட்டடம் தகர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டட இடிபாடுகள் நீர்நிலையில் விழாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் ஃபிளாட்டுகள் வெடிவைத்து தகர்க்கும் பணி நிறைவடைகிறது. கோர்ட் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என நாளையே சுப்ரீம் கோட்டில் அதிக்கை சமர்ப்பிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நான்கு ஃபிளாட்டுகளைத் தகர்த்ததன் மூலம் சுமார் 7,200 டன் கட்டடக் கழிவுகள் ஏற்படும் என்றும், இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த 70 நாள்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.