Published:Updated:

`என் குரலைப் பதிவு செய்யவே இந்த மேடை!' -பட்டமளிப்பு விழாவைப் போர்க்களமாக்கிய மாணவி #CAA

மேற்குவங்க போராட்டம்
மேற்குவங்க போராட்டம்

மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து நாட்டையே உலுக்கி வருகிறது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் காட்டும்விதமான சமூக வலைதளப் பதிவுகள், பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், விருதுகள் ஏற்க மறுப்பு, விருதுகளைத் திருப்பி வழங்குதல், திருமணத் தம்பதியின் போட்டோ ஷூட் எனப் பல்வேறு முறைகளில் மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆளுநருக்கு எதிர்ப்பு
ஆளுநருக்கு எதிர்ப்பு

பொது இடங்கள், சாலைகள்தான் போராட்டக்களம் என இருக்காமல் தங்களால் முடிந்த அல்லது தங்களுக்குக் கிடைத்த இடங்களை எல்லாம் போராட்டக்களமாக்கி வருகின்றனர் மாணவர் அமைப்புகள். அந்தவகையில், ஒரு வித்தியாசமான எதிர்ப்பு சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு அதிக எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. அங்கு ஆளும் கட்சியினர் தொடங்கி மாணவர்கள்வரை அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

இந்த நிலையில், நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் மற்றொரு புறம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொள்ள அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் வந்துள்ளார், ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஆளுநரைக் கல்லூரிக்குள் விடாமல் முற்றுகையிட்டனர்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

ஆளுநரின் காரைச் சுற்றிய மாணவர்கள் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரப் போராட்டம், வாக்குவாதத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் விழாவில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பட்டமளிப்பு விழாவின்போது அனைத்து மாணவர்களும் தங்களுக்கான பட்டப்படிப்புச் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். அப்போது மேடை ஏறிய டெபோஸ்மிதா சௌத்ரி என்ற மாணவி, தன் பட்டத்தைப் பெற்றுவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அதே மேடையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்து எறிந்து `இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்துடன் தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

`என்.ஆர்.சிக்கும் என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; பிரதமர் சொன்னது சரிதான்!' - அமித் ஷா

மாணவியின் எதிர்பாராத இந்தச் செயலால் அந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தற்போது மாணவி குடியுரிமை மசோதா நகலை கிழித்தெறியும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன் செயல் பற்றி பி.டி.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள மாணவி, ``என் செயலில் எந்தக் குழப்பமும் இல்லை. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த இந்த நிறுவனத்திலிருந்து எம்.ஏ பட்டம் பெற்றதில் பெருமையடைகிறேன். அதே பல்கலைக்கழக வளாகத்தில் என் நண்பர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான என் குரலைப் பதிவு செய்ய இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து என் நண்பர்களில் சிலர் பட்டம் பெற மறுத்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆர்கோப்ரோபோ தாஸ் (Arkoprobho Das) என்ற மாணவர் பேசும்போது, ``என் பிரிவைச் சேர்ந்த 25 மாணவர்கள் பட்டம் பெறும் கவுன்களை அணிந்தபடி அந்த விழாவில் கலந்துகொண்டோம். ஆனால், மேடையில் எங்கள் பெயர்கள் அறிவிக்கும்போது நாங்கள் சென்று பட்டம் பெறவில்லை. இதுதான் குடியுரிமைச் சட்டத்துக்கான எங்கள் எதிர்ப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு