Published:Updated:

`சந்திரயான்-2 லாஞ்ச் இருக்குது; லீவ் கொடுங்க!'- கோட்டயம் கலெக்டரை தெறிக்கவிட்ட கமென்ட்

மலையரசு

தொடர் மழை காரணமாக, கோட்டயத்தின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று இரவு 9 மணி அளவில் விடுமுறை அறிவித்தார், கலெக்டர் சுதீர்பாபு.

பள்ளி குழந்தைகள்
பள்ளி குழந்தைகள்

கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. நான்கு மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பிவருகின்றன. இதற்கிடையே, மழையால் கோட்டயம் கலெக்டருக்கு வித்தியாசமான சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக, கோட்டயத்தின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று இரவு 9 மணி அளவில் விடுமுறை அறிவித்தார், கலெக்டர் சுதீர்பாபு.

மழை
மழை

இந்த அறிவிப்பை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே விடுமுறை விடாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த ஃபேஸ்புக் பக்கத்தை முற்றுகையிடத் தொடங்கினர். இதற்கடுத்து நடந்தது எல்லாம் காமெடி ரகம். தங்களுக்கும் விடுமுறைவிட வேண்டும் என ஒவ்வொருவரும் கமென்ட்டுகளைப் பதிவிட்டனர்.

அதில் ஒருவர், ``நாளை (இன்று) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-2 லாஞ்ச் இருக்கிறது. இந்தக் கடுமையான மழையில் பள்ளிக்குச் சென்று, பிறகு கிளாஸை கட் அடித்துவிட்டு வந்து டிவி-யில் சந்திரயான்-2 லாஞ்ச்சை பார்ப்பது எல்லாம் முடியாத காரியம். அதனால், மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும்" எனக் கூறி அட்ராசிட்டி செய்துள்ளார். இதேபோல் ஒரு சிறுவன், ``சார் நீங்கள் விடுமுறை விடாவிட்டால், மற்ற சாதாரண தினத்தைப்போல இந்த தினமும் கடந்துபோகும்.

பள்ளி குழந்தைகள்
பள்ளி குழந்தைகள்

மாறாக நீங்கள் விடுமுறை அறிவித்துவிட்டால், என்னைப் போல் இம்போசிஷன் எழுதாத மாணவர்கள் எல்லாம் அதை எழுதிவிடுவோம். அதுமட்டுமில்லாமல், குளத்தில் குதித்து விளையாடுவோம். இதுவரை குதிக்காத குழந்தைகளுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கும். இது, எதிர்கால தலைமுறையை மேம்படுத்தும் மற்றும் நாடும் வளர்ச்சியடையும்" என்று கூறியுள்ளான். இப்படி பலரும் பல விதமாக கமென்ட்டுகளைத் தட்டிவிட, கலெக்டரின் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே 3000 லைக்ஸ், 2700 கமென்ட், 200 ஷேர் கிடைத்து தொடர்ந்து வைரலாகி வருகிறது.