Published:Updated:

மும்பை சிறையில் இடப்பற்றாக்குறை! - விரைவில் அடுக்குமாடி கொண்ட புதிய சிறை

ஆர்தர் ரோடு சிறை
ஆர்தர் ரோடு சிறை

மும்பையில் கைதிகளை அடைக்க அமெரிக்காவில் இருப்பது போன்று பல அடுக்கு சிறை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

மும்பையில் தற்போது விசாரணைக் கைதிகளை அடைக்க, ஆர்தர் ரோடு சிறை மட்டுமே இருக்கிறது. இந்தச் சிறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்தச் சிறையில் கைதிகளை அடைக்க முடியாது. அதேசமயம் இந்தச் சிறையை விரிவுபடுத்தவும் முடியாது. எனவே, மும்பை நகருக்குள் வேறு ஒரு சிறை கட்டும் திட்டம் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்துவருகிறது. ஏற்கெனவே நகருக்கு வெளியே அருகிலுள்ள சாட்டிலைட் நகரமான நவிமும்பை தலோஜாவில் புதிய சிறை கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தச் சிறையிலிருந்து விசாரணைக் கைதிகளை மும்பை கோர்ட்டுக்கு அழைத்து வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதோடு பாதுகாப்பு பிரச்னையும் இருக்கிறது.

எனவே, மும்பைக்குள் புதிதாக ஒரு சிறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது. இதற்கு முன்பு இருந்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதற்கு ஒப்புதல் கொடுத்திருந்தார். அமெரிக்காவில் இருப்பது போன்று பல அடுக்குகள்கொண்ட சிறையைக் கட்ட மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

ஆர்தர் ரோடு சிறை
ஆர்தர் ரோடு சிறை

இது குறித்து மாநில சிறைத்துறை அதிகாரி சுனில் ரமானந்த் கூறுகையில், ``புதிய சிறை 5,000 கைதிகளை அடைக்கும் வகையில் உருவாக்கப்படும். அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருந்தபோதே இதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். தற்போது மும்பையிலிருக்கும் சிறையை விரிவுபடுத்த முடியாத நிலை இருக்கிறது. அதேசமயம் புதிய சிறை உடனடியாக தேவைப்படுகிறது. அதற்கு நிலம் ஒரு பிரச்னையாக இருக்கிறது. எனவே, புதிய சிறையைப் பல மாடிகள்கொண்டதாக கட்ட முடிவு செய்திருக்கிறோம். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பால்கர், புனே, ஹின்கோலி, கோண்டியா போன்ற பகுதிகளிலும் புதிய சிறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

`ஆர்தர் ரோடு சிறை; சிபிஐ அலுவலகம்!’ - மும்பை அழைத்துவரப்படும் விஜய் மல்லையா

மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஐபி-க்களை அடைக்க பிரத்யேகச் சிறை அறைகள் கட்டப்பட்டுள்ளன. தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்டால் அவர்களை அடைக்கவும் வசதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு