Published:Updated:

`நள்ளிரவுவரை நீடித்த கைகலப்பு; கற்களால் தாக்குதல்!’- #GalwanValley-யில் என்ன நடந்தது?

#GalwanValley
#GalwanValley

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா-சீன வீரர்கள் இடையேயான கைகலப்பில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல், சீனா தரப்பில் வீரர்கள் சிலர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியா- சீனா இடையே எல்லைப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாடுகளும் 3,488 கி.மீ நீள எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. கல்வான் ஆற்றுமுகத் துவாரத்தில் இருநாட்டு வீரர்களும் எதிரெதிராக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆற்றங்கரையில் நடந்த சம்பவமே, 1962ம் ஆண்டு போருக்கு வழிவகுத்தது. அதேபோல், திபெத் பீடபூமியில் கடல்மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் உள்ள பாங்காங் சோ (Pangong Tso) ஏரியின் பகுதிகளை இருநாடுகளுமே உரிமைகோரி வருகின்றன.

இந்தியா - சீனா எல்லை
இந்தியா - சீனா எல்லை

இந்தநிலையில், லடாக்கில் இந்தியா மேற்கொண்டுவந்த கட்டுமானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், எல்லைப்பகுதியில் சீனா படைகளைக் குவித்தது. இதையடுத்து, இந்தியாவும் லடாக் எல்லையில் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தது. இந்தநிலையில், இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ம் தேதி நடந்தது. அதில், எல்லையில் அமைதியை நிலைநாட்டவே, இரு நாடுகள் விரும்புவதாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதேபோல், பதற்றத்தைத் தணிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

`1975 -ம் ஆண்டுக்குப் பிறகு...’ -லடாக்கில் சீனாவுடன் மோதிய இந்தியா; 3 வீரர்களுக்கு நேர்ந்த துயரம்

கல்வான்  பள்ளத்தாக்கு மோதல்!

இந்தநிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இந்திய ராணுவத்தின் கர்னல் ஒருவர், வீரர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணமடைந்தார். அதேநேரம் சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்தக் கைகலப்பு சம்பவத்தில் இருதரப்பிலும் வீரர்கள் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சீனா தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
AP | Manish Swarup

இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின் படி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவப் படைகள் குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்போது, இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய எல்லைக்குள் நின்றிருந்த ராணுவ கர்னலை சீன வீரர்கள் கற்களால் தாக்கியதாகவும், அதையடுத்தே இரு நாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஏ.எஃப்.பி செய்திநிறுவனத்திடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர், ``சீன வீரர்கள் கற்களால் தாக்கியதும், இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இருதரப்பிலும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. கற்களாலும் லத்தியாலும் ஒருவரை ஒருவர் இருதரப்பிலும் மாறி மாறித் தாக்கியிருக்கிறார்கள். 15ம் தேதி மாலை தொடங்கிய மோதல் நள்ளிரவு வரை பல மணிநேரம் நீடித்திருக்கிறது. மூர்க்கத்தனமாக வீரர்கள் மோதிக்கொண்டதில், இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் எல்லையை ஒட்டிய இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதியில் நடைபெற்றிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

என்ன சொல்கிறது சீனா?

சீனா தரப்பிலிருந்து உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்கள் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுதொடர்பாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஹு ஜின் (Hu Xijin) ட்விட்டரில், `எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்குக் கைகலப்பில் சீன ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டுப்பாட்டுடன் இருப்பதை சீனாவின் பலவீனம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை மட்டும் நான் இந்தியாவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுடன் மோதலை சீனா விரும்பவில்லை. அதேநேரம் எங்களுக்கும் பயமும் இல்லை’’ என்று பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது. சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தாக்கியதாகவும், இந்தியா தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

இந்தச் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானே ஆகியோர் டெல்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டில் ஆலோசனை நடத்தினர். எல்லைப்பகுதி பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் வீடியோ கால் மூலமாக அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கியிருக்கிறார்.

`கிரகப்பிரவேசம் முடிந்த 3 வது நாள்' - லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,``ஜூன் 15ம் தேதி இரவு சீன வீரர்கள் அத்துமீறிய நிலையில், இருநாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே நடைபெற்ற அதிகாரிகள் சந்திப்பில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், சீனா தரப்பில் அதை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எல்லைகளை நிர்வகிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே செய்துவருகிறோம். இதையே சீனா தரப்பிலும் எதிர்பார்க்கிறோம். எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே இந்தியா விரும்புகிறது. அதேநேரம், இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டும் பொறுப்பில் இருந்தும் தவற மாட்டோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு