Published:Updated:

`மாணவர் சங்கம் முதல் மோடி கவனம் ஈர்த்த உரை வரை!' - யார் இந்த`லடாக் எம்.பி' ஜம்யாங் நம்கியால்?

பா.ஜ.க-வின் லடாக் தொகுதி எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால், தனது ஒரே ஒரு நாடாளுமன்ற உரையால் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.

Jamyang Tsering Namgyal
Jamyang Tsering Namgyal ( Facebook )

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இதற்கான இரண்டு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஜம்மு-காஷ்மீரின் பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சிகளும் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைவர்களை மத்திய அரசு வீட்டுச் சிறையில் அடைத்ததாகவும், அதற்காகவே படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Tsering Namgyal
Tsering Namgyal

இந்த விவகாரத்தில் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது லடாக் தொகுதி எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைதான். 17 நிமிடங்கள் அவர் பேசிய பேச்சுக்கு பா.ஜ.க எம்.பி-க்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். அமித் ஷா, அவரது உரையை உற்றுக் கவனித்த நிலையில், பிரதமர் மோடி ஒருபடி மேலேபோய் அவரது உரையைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 34 வயதான நம்கியால் இதன்மூலம் ஒரேநாளில் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அவரைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை பலமடங்காகி இருக்கிறது. அவரது உரைக்கு முன்னர் 4,000 ஃபாலோயர்கள் இருந்தநிலையில், நாடாளுமன்ற உரைக்குப் பின்னர் அவரை 1,29,000-க்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர். அதேபோல், `ஃபேஸ்புக்கில் என்னை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியதால் எனக்கு வரும் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று வெளிப்படையாகவே நம்கியால் கூறும் அளவுக்கு நிலைமை மாறியது.

நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், ``கார்கில், லடாக்கில் இருக்கும் மக்களுக்கு லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி. அரசியல் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கும் இரு குடும்பங்களைத் தவிர, ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் இது நல்லதொரு முடிவு. ஏனெனில், அந்த இரு குடும்பமும் இங்கு ஆட்சி செய்யவில்லை, ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். காஷ்மீர் பிரச்னை என இரு குடும்பமும் தொடர்ச்சியாகப் பேசி வருகிறது. காஷ்மீரின் பிரச்னையே அந்த இரு குடும்பமும்தான். காஷ்மீர் அவர்களின் குடும்ப சொத்து என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி எப்போதும் அது நடக்காது'' என்று காட்டமாகவே பேசினார்.

Tsering Namgyal
Tsering Namgyal
Facebook

மேலும், ``சில புத்தகங்களைப் படித்துவிட்டு எங்களைப் பற்றி பேசுகிறார்கள், கார்கில் பற்றி பேசுகிறார்கள். கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைத்தோம். மக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் வெற்றிபெற்றோம்'' என்று நம்கியால் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

ஜே.டி.என் என மக்களால் அழைக்கப்படும் ஜம்யாங் செரிக் நம்யால், லடாக்கின் மாத்தோ எனும் கிராமத்தில் கடந்த 1985-ம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின்னர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த அவர், அரசியலில் களமிறங்கும் முன்பாக லடாக் பகுதியில் செயல்பட்டுவந்த மாணவர் சங்கத்தில் தலைவர் பதவி முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். பா.ஜ.க உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்தார் நம்கியால். பின்னர், அப்போதைய லடாக் தொகுதி பா.ஜ.க எம்.பி-யான துப்ஸ்டன் சேவாங்-கின் (Thupstan Chhewang) உதவியாளராகப் பணியாற்றினார்.

Tsering Namgyal
Tsering Namgyal
Facebook

பின்னர், லடாக்கின் லே மாவட்டத்தை நிர்வகிக்கும் Ladakh Autonomous Hill Development Council-ன் தலைவராக 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அம்மாவட்டத்தின் மாஸ்டர்லாங் தொகுதியில் இருந்து அந்த கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட்ட அவர், மாபெரும் வெற்றி பெற்றார். அவருக்கு முன்பாக கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்துவந்த டோர்ஜாய் மோர்டாப், பதவி விலகியதை அடுத்து, அப்பொறுப்பு நம்கியால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பா.ஜ.க-வில் ஜம்மு-காஷ்மீர் மாநில ஐ.டி விங் நிர்வாகியாகவும் நம்கியால் பதவி வகித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் லடாக் தொகுதியில் போட்டியிட்ட அவர், 42,914 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர் சஜ்ஜாத் ஹுசைன் 31,984 வாக்குகள் பெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய ரிக்ஜின் ஸ்பல்பார் 21,241 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நம்கியால், வெற்றிபெற்று 17-வது மக்களவையின் உறுப்பினரானார்.

Tsering Namgyal
Tsering Namgyal
Facebook

அரசியல் தவிர்த்து எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் நம்கியால். 2013-ம் ஆண்டில் `A Gift of Poetry' என்ற தலைப்பில் கவிதை நூல் ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். அதேபோல், லடாக் விவகாரம் குறித்து அவர் ஏற்கெனவே `Divisional Status for Ladakh- Its Implication' மற்றும் Inclusion of Bhoti Language in the Eight Schedule of Indian Constitution என்ற இரு தலைப்புகளில் அவர் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். முதல்முறை எம்.பி-யான நம்கியால், காஷ்மீர் மசோதா குறித்த தனது உரையால் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார்.