Published:Updated:

மகாராஷ்டிரா நிலச்சரிவு: பலி 90-ஆக அதிகரிப்பு! - இடிபாடுகளில் சிக்கிய 70 பேரை மீட்கும் பணி தீவிரம்

வீட்டின் மேல்தளத்தில் தண்ணீர்
வீட்டின் மேல்தளத்தில் தண்ணீர்

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் வியாழக்கிழமையிலிருந்து கனமழை பெய்துவந்தது. ராய்கட், ரத்னகிரி மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. பெரும்பாலான கிராமங்களில் மழை வெள்ளம் சாலைகளை அரித்துச் சென்றதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ராய்கட் மாவட்டத்திலுள்ள தாலியா என்ற கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

வெள்ளிக்கிழமை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரும், தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் மேலும் சிலரின் உடல்களை மீட்டுள்ளனர். இதனால் ஒரே கிராமத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 47 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இந்தக் கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதே மாவட்டத்தில் கவ்னாலே, போலந்தூர் கிராமங்களில் ஆறு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் தம்னாந்த் என்ற கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சாங்கிலி, சதாரா மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசுத் தரப்பில் 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் மற்றும் மீட்புப் பணி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திரமோடி இருவரும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் போனில் பேசி தேவையான உதவிகளை செயவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

ராய்கட் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர். ராய்கட் மாவட்டம்தான் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சதாரா, கோலாப்பூரில் பெய்த கனமழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை. சாங்கிலி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்களில் 85,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ரத்னகிரி, ராய்கட் மாவட்டங்களில் மழைநீர் மாடி வரை வந்திருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா: கனமழையால் நிலச்சரிவு; 36 பேர் பலி! - மீட்புப் பணியில் கடற்படையினர் தீவிரம்

2005-ம் ஆண்டு பெய்த மழையைவிட இந்த மழை மோசமானதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். `40 ஆண்டுகளில் இது போன்ற ஒரு மழையை நாங்கள் பார்த்ததில்லை’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தங்களுக்குத் தகவல் கொடுக்கவில்லை என்று இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மின் விநியோகம் இந்த மாவட்டங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகுதான் மின் விநியோகத்தைச் சரிசெய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்கட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி வழியாக சாவித்திரி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏற்கெனவே கனழமையால் தண்ணீர் முழுக் கொள்ளளவுடன் சென்றது. புதிதாகப் பெய்த கனமழை, கடல் சீற்றம் போன்றவை காரணமாகவே இந்த அளவுக்கு மழைநீர் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்துக்கு அருகிலுள்ள மலைப்பகுதியான மகாபலேஷ்வரில் மாநிலத்திலேயே அதிக மழை பெய்துள்ளது. அங்கிருந்து சாவித்திரி ஆற்றில் வரும் தண்ணீரும் இந்த வெள்ள சேதத்துக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணியில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் 49 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு