Published:Updated:

`சிறுமியின் புன்னகை என் தலைமுடியைவிட அழகானது!' - சட்டக்கல்லூரி மாணவி எடுத்த முடிவு

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வார்த்தைகளைக் கேட்ட கல்லூரி மாணவி ஒருவர், தனது முடியைத் தானமாக வழங்கியுள்ளார்.

Representative Image
Representative Image

மங்களூரைச் சேர்ந்த பவித்ரா, முதலாமாண்டு சட்டக்கல்லூரி மாணவி. உடல்நலம் சரியில்லாததால், கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, சிறுமி ஒருவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது தலைமுடியைத் தானாக வழங்கியிருக்கிறார்.

Pavithra
Pavithra
TOI

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ``பதினைந்து நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்குச் சென்றேன். எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, எனது அருகில் வந்து அமர்ந்தார். எனது தலைமுடியை வருடியவாறே உங்கள் கூந்தல் அழகாக இருக்கு அக்கா என்றாள். அந்தச் சிறுமியின் பாராட்டும் வார்த்தைகள் என்னை யோசிக்கவைத்தது. மருத்துவ சிகிச்சை காரணமாக தலைமுடியை இழந்த சிறுமி, எவ்வளவு வேதனையாக இருப்பார் எனப் புரிந்தது. அந்தச் சிறுமியுடன் என்னால் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. அவருடைய வலியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது” என்றார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர், தனது எண்ணத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றிவரும் நபர்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அவர்களது வழிகாட்டுதலின்படி, தற்போது தலைமுடியைத் தானமாக வழங்கியுள்ளார்.

Representative Image
Representative Image

``எனது தலைமுடியைத் தானமாக வழங்கிய பின்னர், நான் மகிழ்ச்சியடைந்தேன். இனி வரும் காலங்களில், இதுபோன்று செய்யவே விரும்புகிறேன். இந்தப் புன்னகை என் தலைமுடியை விட அழகானது!' என்று மாணவி பவித்ரா கூறியிருக்கிறார்.