Published:Updated:

`நாளை என்னை வந்து சந்தியுங்கன்னு சொன்னார்’- சுஷ்மாவின் கடைசி வார்த்தைகளை கண்ணீருடன் பகிரும் நண்பர்

`சுஷ்மாவின் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை' என அவரின் நண்பரும் குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஷ் சால்வ் கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ் ஒரு சிறந்த மனிதர். அவரது இரக்க குணத்தாலும் அரவணைப்பாலும் அனைவரின் நெஞ்சங்களிலும் சென்றடைந்தார். சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அத்வானி கூறிய வார்த்தைகள் இது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தபோது தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்தார். அதேபோல் வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டார். சுஷ்மா ஸ்வராஜை அணுகுவது மிகவும் எளிதாக இருந்தது. ட்விட்டரில் தங்கள் பிரச்னைகள் குறித்து பதிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தார். அந்த நன்றியை மறக்காத உள்ளங்கள் இன்று சுஷ்மாவுக்காக கண்ணீர் வடிக்கிறது.

 ஹமீத் அன்சாரி
ஹமீத் அன்சாரி
ANI

இந்தியாவைச் சேர்ந்த ஹமீத் அன்சாரி எல்லைத் தாண்டிய குற்றத்துக்காக 2012 பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்தும் அவரை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை. போலி அடையாள அட்டை வைத்திருந்ததாக அவர் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2015-ல் தான் அன்சாரி பாகிஸ்தான் வசம் இருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. சரியான ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் சுஷ்மாவின் கவனத்துக்கு வந்ததும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.

சுஷ்மாவின் மறைவு குறித்து பேசியுள்ள ஹமீத் அன்சாரி, ``கடந்த வருடம் நான் அவரைச் சந்திக்கும்போது ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். என்னை அவர் மகன்போல் நடத்தினார். இந்தச் சந்திப்பு நடந்து ஒரு வருடம்கூட இருக்காது. இந்த இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது. அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு எனது இதயம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. அந்த வலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை'' என்றார்.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா நேற்று இரவு 8.45 மணிக்குதான் என்னுடன் போனில் நன்றாகப் பேசினார். அவரின் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை'' என சுஷ்மாவின் நண்பரும் குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஷ் சால்வ் கூறியுள்ளார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், அங்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி குல்பூஷண் ஜாதவை 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தான் அரசு கைதுசெய்தது. ஜாதவ் இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் உளவாளி என்றும், பலுசிஸ்தான் பகுதியில் பிரிவினைவாதத்தைத் தூண்டியதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அவருக்கு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஹரிஷ் சால்வ் வாதாடினார். ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் வாதாடுவதற்கு தனக்கு சம்பளமாக 1 ரூபாய் போதும் என ஹரிஷ் சால்வ் கூறியிருந்தார். குல்பூஷண் ஜாதவுக்காக சர்வதேச அரங்கில் அதிகம் குரல் கொடுத்தது சுஷ்மாதான்.

ஹரிஷ் சால்வ்
ஹரிஷ் சால்வ்
ANI

``நேற்று இரவுதான் என்னுடன் போனில் நன்றாகப் பேசினார். உண்மையில் இது மிகவும் உணர்ச்சிகரமான உரையாடல். நீங்கள் நாளை வந்து என்னை சந்திக்க வேண்டும். நீங்கள் வாதாடி வென்ற வழக்குக்காக நான் உங்களுக்கான 1 ரூபாயை கொடுக்க வேண்டும் என்றார். நான் அந்த விலைமதிப்பற்ற கட்டணத்தை பெற வேண்டியிருந்தது. நாளை 6 மணியளவில் வந்து சந்திக்கச் சொன்னார். அவர் ஒரு சிறந்த தலைவர்” என ஹரிஷ் சால்வ் கண்ணீருடன் கூறினார்.