Published:Updated:

`ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினர்; கமல்ஹாசனின் உறவினர்!' -யார் இந்த பராசரன்?

பராசரன் (இடது ஓரம்)
பராசரன் (இடது ஓரம்)

தமிழகத்தைச் சேர்ந்த பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் வழக்கறிஞரும் ராமஜென்மபூமி வழக்கில் இந்துக்கள் தரப்பில் வாதாடியவருமான கே.பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள இவரின் வீடு ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாகச் செயல்படும். ஸ்ரீரங்கத்தில் 1927- ம் ஆண்டு, பிறந்த பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான பராசரனின் மகன்கள் மோகன், சதீஷ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்களே. 1958- ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், 1980- ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் 1983- ம் ஆண்டு முதல் 89- ம் ஆண்டு வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.

பராசரன்
பராசரன்

இந்திரா காந்தியை எதிர்த்து கருத்துகளை வெளிப்படுத்தும் அளவுக்கு இவர் தைரியம் கொண்டவர். 1985- ம் ஆண்டு `இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அலுவலகத்தை இடிப்பதற்காக காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, சொலிசிட்டர் ஜெனராலாக இருந்த இவரின் அறிவுரையை மீறி இந்திரா அரசு செயல்பட்டது. இதன் காரணமாக, இந்த வழக்கில் வாதாட மறுத்த பராசரன், `நிர்பந்தித்தால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என்றும் வெளிப்படையாக அறிவித்தார். பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?

பராசரன் மனைவி சரோஜா நடிகர் கமல்ஹாசனுக்கு உறவினர். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, பராசரன் இரு வழக்குகளில் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். ஒன்று சபரிமலை வழக்கு. இந்த வழக்கில் நாயர் சொசைட்டி தரப்பில் ஆஜரான பராசரனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

ராமஜென்மபூமி கோயில்
ராமஜென்மபூமி கோயில்

உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டது. அடுத்ததாக, ராமஜென்ம பூமி வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்தது. இந்த வழக்குக் கட்டணமாக பராசரன் ரூ.1 மட்டுமே சம்பளமாகப் பெற்றார். ராமஜென்மபூமி அறக்கட்டளையில் 15 பேர் இடம் பெறுகின்றனர். அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெறுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு