Published:Updated:

`இன்று அரசியல் பேச அனுமதித்தால்.... நாளை?!’ - சர்ச்சையில் சிக்கிய பிபின் ராவத்

குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டம் தொடர்பாக முதல்முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

பிபின் ராவத்
பிபின் ராவத் ( ANI )

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் மட்டும் இதுவரை நாடு முழுவதும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியுரிமை போராட்டம்
குடியுரிமை போராட்டம்
AP

உத்தரப்பிரதேசம், டெல்லி, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாகப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்தச் சட்டத்துக்கு நாட்டின் உள்ள அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் வரிசையில் தற்போது இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிபின் ராவத், ``மக்களை வழிநடத்துபவரே தலைவர். நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள். ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது.

பிபின் ராவத்
பிபின் ராவத்

நம் கண் முன்பு நடந்த பல விஷயங்கள் அதற்குச் சாட்சியாக உள்ளன. ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லா நகரங்களிலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் சக மாணவர்களை வழிநடத்தி வன்முறை மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள். இது தலைமை அல்ல” எனப் பேசியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

இதற்கிடையில், இவரின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிபின் ராவத் கருத்துக்குப் பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரிஜேஷ் கலப்பா, ``குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டம் பற்றி ராணுவ தளபதி பேசியிருப்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது. இப்போது ராணுவத் தளபதியை அரசியல் குறித்துப் பேச அனுமதித்தால் நாளை ராணுவம் அரசை வழிநடத்தவும் இது வழிவகுக்கும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து, ``தலைமை என்பது ஒருவரது அலுவலக வரம்புகளை அறிவது. இது மக்களின் மேலாதிக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் நீங்கள் தலைமை தாங்கும் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பது பற்றியது” என ஹைதராபாத் எம்.பி ஓவைசி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `தளபதி பிபின் ராவத்தின் கருத்து மோடி அரசைக் குறைத்து மதிப்பிடுவதைப் போல உள்ளது. தான் மாணவராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடியதாக நமது பிரதமர் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ராணுவத் தளபதி கூறுவது முற்றிலும் தவறானது” என ஓவைசி கூறியுள்ளார்.