Published:Updated:

`முகமூடி, ஹாக்கி மட்டைகள்; நொறுக்கப்பட்ட கதவுகள்!'- கண்ணீருடன் விவரித்த ஜே.என்.யூ மாணவர்கள்

ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் மோதல்

முகமூடி அணிந்த நபர்கள் மாலை 4 மணியளவில் ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நுழைந்து மாணவர்கள், பேராசியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

`முகமூடி, ஹாக்கி மட்டைகள்; நொறுக்கப்பட்ட கதவுகள்!'- கண்ணீருடன் விவரித்த ஜே.என்.யூ மாணவர்கள்

முகமூடி அணிந்த நபர்கள் மாலை 4 மணியளவில் ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நுழைந்து மாணவர்கள், பேராசியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Published:Updated:
ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் மோதல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. மாணவ அமைப்புகளுக்கு இடையேயான மோதல் காரணமாக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின்போதுதான் இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இந்த மோதல் குறித்து பல்கலைக்கழகம் தரப்பில், ``வெளியாட்கள் உள்ளே வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு இடையேயான மோதல்” எனக் கூறியுள்ளது.

ஜேஎன்யூ வளாகத்தில் போலீஸார் குவிப்பு
ஜேஎன்யூ வளாகத்தில் போலீஸார் குவிப்பு

இடதுசாரி அமைப்புகளோ இந்தத் தாக்குதலுக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர்தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜே.என்.யூ மாணவர் அமைப்பு தலைவரான அய்ஷி கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளோ இடதுசாரி அமைப்புகள்தான் இந்தக் கலவரத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தையடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ``ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக இரண்டு பிரிவினர்களிடையே மோதல் நடந்து வருகிறது. ஜே.என்.யூ நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றுள்ளோம்” என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு
அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மாணவர்கள்,``மாலை 4 மணியளவில் சபர்மதி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் முகமூடி அணிந்த சில நபர்கள் அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த மாணவர்கள், பேராசியர்கள் என கண்மூடித்தனமான தாக்குதல்களை அவர்கள் நடத்தினர். கற்களை வீசித் தாக்கியதுடன், ஹாக்கி மட்டைகள், இரும்பு பைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்கள் தாக்கினர். இதில், மாணவர்கள், பேராசியர்கள் பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது போலீஸார் காப்பாற்ற முன்வரவில்லை. பூட்டப்பட்ட கதவுகளை அடித்து உதைத்ததுடன் பெண்கள் விடுதிக்குள் புகுந்தும் முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர்'' என்று கண்ணீருடன் விவரித்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , ``ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைகளைப் பற்றி அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன். மாணவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். போலீஸார் உடனடியாக வன்முறையைத் தடுத்து நிறுத்தி அமைதியை மீட்டெடுக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்காவிட்டால் நாடு எவ்வாறு முன்னேறும்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களைப் பார்த்தேன். இந்த வன்முறை சம்பவத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். இது பல்கலைக்கழகத்தின் பாரம்பர்யத்துக்கும் கலாசாரத்துக்கும் எதிரானது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

``முகமூடி அணிந்த நபர்கள் ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. மாணவர்களின் துணிச்சலான குரல்களுக்கு நாட்டை கட்டுப்படுத்தும் பாசிஸ்ட்டுகள் அஞ்சுகிறார்கள். ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அவர்களின் அச்சத்தையே காட்டுகிறது” என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

ஸ்டாலின் கண்டனம்
ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``ஜே.என்.யூ வளாகத்தில் முகமூடி அணிந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.