Published:Updated:

` அரசியல்வாதிகள்தாம் அவருடைய காலை உணவு!' - தேர்தல் ஆணையத்தின் முகத்தையே மாற்றிய டி.என்.சேஷன்

டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என்றழைக்கப்படும் டி.என்.சேஷன் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என்.சேஷன், மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காட்டில் 1932-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். பாலக்காட்டில் இருந்த விக்டோரியா கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்த அவர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிந்தார். 1955 பேட்ச் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சேஷன், இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர். கடந்த 1989-ல் மத்திய அரசின் செயலாளராக இருந்தவர், 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி நாட்டின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அப்போதைய பிதமர் சந்திரசேகரால் நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வரை 6 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த சேஷன், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் முன்னர், அவர் திட்டக்கமிஷன் தலைவராகவும் பதவி வகித்தார்.

டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்தபோது பல்வேறு நடைமுறைகளில் சேஷன் கண்டிப்புக் காட்டினார். `வாக்காளர்களை விலைகொடுத்து வாங்குவதோ அல்லது அவர்களை மிரட்டுவதோ கூடாது. தேர்தலின்போது மதுபானங்கள் விநியோகிப்பது கூடாது. அதேபோல், அரசு இயந்திரத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சாதி மற்றும் மதரீதியிலான பிரசாரங்கள் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் வாக்குசேகரிக்கக் கூடாது மற்றும் தேர்தல் நேரத்தில் முறையான அனுமதியின்றி அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது' என சேஷன், தனது பதவிக் காலத்தில் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு கண்டிப்புக் காட்டினார்.

Vikatan

கள்ள ஓட்டு முறையைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோதே. அதேபோல், தேர்தல் நடத்தை விதிமுறைகள், வேட்பாளர்கள் அதிகபட்ச செலவுத் தொகை நிர்ணயம் என உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் முறையிலிருந்து ஊழலை ஒழிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். கடந்த 1993-ம் ஆண்டு அவரது கண்காணிப்பின்கீழ் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது மிகச்சாதாரணமாக நடைபெற்று வந்த அந்த காலத்தில், முந்தைய தேர்தலில் 873ஆக இருந்த அந்த எண்ணிக்கை 1993-ம் ஆண்டு தேர்தலில் 273ஆகக் குறைந்தது. வாக்குப்பதிவு நாளன்று நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கையும் 36ல் இருந்து 3ஆகக் குறைந்தது உ.பியில். அதேபோல், முறைகேடுகளால் வாக்குப்பதிவு நிறுத்தப்படுவது அல்லது ஒத்திவைக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையும் முந்தைய 17 என்ற கணக்கில் இருந்து 3ஆக அந்தத் தேர்தலில் குறைந்தது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதேபோல், 1994-ம் ஆண்டு ஆந்திரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் கோவா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் தினசரி தேர்தல் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் வேட்பாளர்கள் மீது பதியப்பட்டது. `அரசியல்வாதிகளைத் தனது காலை உணவாக எடுத்துக்கொள்பவர்' என்று சேஷன் குறித்து அப்போது பிரபலமாக கருத்து பகிரப்பட்டு வந்தது. தனது நேர்மையான செயலுக்காக பலமுறை ஆளும்கட்சியோடும் அதிகார வட்டத்தோடும் நேருக்கு நேர் மல்லுக்கட்டியவர். 1994-ம் ஆண்டு தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர்களான சீதாராம் கேசரி மற்றும் கல்ப்நாத் ராய் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோதமாக வாக்காளர்களைக் கவர முயன்றதாக பிரதமரிடமே புகார் கொடுத்தார். அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக அரசியல் வட்டாரத்தில் அவர் குறித்து புகார் கிளம்பிய நேரத்தில், எந்தச் சலனமும் இல்லாமல் அதைக் கடந்துசென்றார்.

1995-ல் டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.என்.சேஷனுக்கு அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை விமானநிலையம் வந்திறங்கிய அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் விமானநிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், ஏறக்குறைய 6 மணி நேரமாக அவரால் விமான நிலையத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டதால், அன்றைய தமிழக டி.ஜி.பி ஸ்ரீபால் தலைமையில் போலீஸார் அவரைப் பாதுகாப்பாக மீட்டுவந்தனர். அதேபோல், சென்னையில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் அவருக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தவர் அவர்.

இந்தியத் தேர்தல் ஆணையம்... கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!
டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

தேர்தலில் விளையாடும் பணம் மற்றும் அதிகார பலத்துக்கு எதிராக மட்டும் சேஷன் சாட்டையை சுழற்றவில்லை. வாக்குப்பதிவுக்கு 6 நாள்களுக்கு முன்னரே பல மாநிலங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொகுதிக்கு 3 பேர் என மொத்தம் 15,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில அரசுகளின் ஊழியர்கள் 15 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்புப் பணிகளில் மட்டும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,25,000-த்தைத் தொட்டது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் கொண்டுவந்த சீர்திருத்தத்துக்காக டி.என்.சேஷனுக்குக் கடந்த 1996-ல் ராமன் மகசேசே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அரசியல்வாதிகள் மட்டுமின்றி உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தவர் டி.என்.சேஷன். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அடுத்த ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் டி.என்.சேஷன் போட்டியிட்டார். ஆனால், கே.ஆர்.நாராயணன் அதில் வென்றார். மத்தியப்பிரதேச போலிவாக்காளர்கள் தொடர்பான வழக்கைக் கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையைப் பெற்றதாக நினைவுகூர்ந்தது. அடுத்தமாதம் தனது 87-வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த டி.என்.சேஷன், நேற்று இரவு 9.45 மணியளவில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் உயிரிழந்தார்.

டி.என்.சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, ``டி.என்.சேஷன் மக்களுக்காகப் பணியாற்றிய மகத்தானவர். இந்தியத் திருநாட்டுக்காக அக்கறையுடனும் நம்பகத்தன்மையுடனும் பணியாற்றியவர். அவர் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் நம்முடைய ஜனநாயத்தை வலிமையாகவும் அதேநேரம் மக்கள் அதிக அளவில் பங்கேற்கவும் வழிவகை செய்தது. அவரது இழப்பு வேதனையைத் தருகிறது'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``அவர் ஒரு லெஜண்ட். அனைத்துத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மட்டுமல்லாது தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு நிச்சயமாக அவர் ஒரு உந்துசக்தி'' என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.என்.சேஷனின் வீட்டில் அவரை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு