Published:Updated:

விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைத் தூக்கிச் சென்ற சிறுத்தை! - துரத்திச் சென்று மீட்ட வாலிபர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறுத்தையிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவனுடன் வினோத்
சிறுத்தையிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவனுடன் வினோத்

மும்பையில் வீட்டுக்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை ஒன்று திடீரெனத் தூக்கிச் சென்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையின் மையப்பகுதியிலுள்ள கோரேகாவ் ஆரேகாலனி பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டது. இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்தச் சிறுத்தைகளுக்கு மத்தியில் மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்ந்துவருகின்றனர். அதிக அளவில் பழங்குடியின மக்கள் குடில்களில் வசித்துவருகின்றனர். அதோடு தமிழர்களும் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்பவர்களை அடிக்கடி சிறுத்தைகள் தாக்குவதுண்டு.

இந்தநிலையில், ஆரேகாலனி யூனிட் 3-ல் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வெளியில் ஆயுஷ் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். பக்கத்து வீட்டு வாசலில் ஆயுஷின் மாமா நின்றுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் அங்கு வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்த்துக்குள் சிறுவனைத் தனது வாயில் கவ்விக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் ஓடியது. இதைப் பார்த்த சிறுவனின் மாமா வினோத் குமார், சிறிதும் தாமதிக்காமல் சிறுத்தையை விரட்டிச் சென்றார். தன்னை ஒருவர் பின்தொடர்வதை கவனித்த சிறுத்தை, சிறுவனைப் புதருக்குள் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இது குறித்து வினோத் குமார் கூறுகையில், ``நான் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது விளையாடிக்கொண்டிருந்த ஆயுஷை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது. நான் சிறுத்தையை விரட்டிச் சென்றேன். இதனால் பயந்துபோன சிறுத்தை சிறுவனைப் போட்டுவிட்டுச் சென்றது. நான் சிறுவன் மீது படுத்துக்கொண்டு சிறுத்தையிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றினேன். சற்று தூரத்தில் சிறுத்தை நின்று எங்களை பார்த்துக்கொண்டேயிருந்தது.

சிறுவனுடன் தாயார் ஆர்த்தி
சிறுவனுடன் தாயார் ஆர்த்தி

இதனால் மீண்டும் என்னைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் வேறு இருந்தது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் சிறுவன் மீது படுத்துக்கொண்டேன். பின்னர் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது” என்றார். ஆயுஷ் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனுக்குத் தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. டாக்டர்கள் எட்டு தையல் போட்டு சிறுவனுக்குச் சிகிச்சையளித்தனர். சிறுத்தை, ஒரு மாதத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்து பொதுமக்களைத் தாக்குவது இது நான்காவது சம்பவம்.

திருச்சி: இரண்டு பேரைத் தாக்கிய சிறுத்தை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

இது குறித்து சிறுவனின் தாயார் ஆர்த்தி கூறுகையில், ``என் மகன் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தன் தம்பி சிறுத்தையை விரட்டிச் சென்றிருக்காவிட்டால் என் மகனை இப்போது உயிரோடு பார்த்திருக்க முடியாது. இந்தப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு போதிய அளவு தெருவிளக்குகளை அதிகாரிகள் பொருத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ``சிறுத்தை சிறுவனைத் தூக்கிச் சென்ற இடத்தில் ஒரு தெருவிளக்குகூட இல்லை. இரவு நேரத்தில் நாங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருட்டில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது. அதிகாரிகளிடம் தெருவிளக்குகள் போட்டுக்கொடுக்கும்படி கேட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை” என்று குறைபட்டுக்கொண்டனர்.

சிறுத்தையிடமிருந்து மீட்கப்பட்டட சிறுவனுடன் வினோத்
சிறுத்தையிடமிருந்து மீட்கப்பட்டட சிறுவனுடன் வினோத்

இந்தப் பிரச்னை குறித்து உள்ளூர் சிவசேனா எம்.எல்.ஏ ரவீந்திர வைக்கர், வனத்துறை அதிகாரி கிரிஜா தேசாய் ஆகியோர் உள்ளூர் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினர். இதில் உடனடியாக குடியிருப்புப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றவும், உள் பகுதியில் செல்லக்கூடிய சாலைகளில் தெருவிளக்குகள் பொருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களுக்கு உடனே தெருவிளக்குகளைப் பொருத்தும்படியும், குப்பைகளை அகற்றும்படியும் உத்தரவிட்டிருப்பதாக ரவீந்திர வைக்கர் தெரிவித்தார். குப்பைகள் அதிகமாகச் சேரும் இடங்களில் தெரு நாய்கள் வருகின்றன. இரவு நேரங்களில் சரியான உணவு கிடைக்காத சிறுத்தைகள் தெருநாய்களைப் பிடிப்பதற்காக அந்தப் பகுதிக்கு வருகின்றன. ஆனால் தெரு நாய்கள் இல்லாத பட்சத்தில் இரவில் வெளியில் வரும் பொதுமக்களைச் சிறுத்தைகள் தாக்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு