Published:Updated:

`வாட்ஸ்அப் குரூப்பில் சர்ச்சைக்குரிய பதிவு!'- ஆசிரியை புகாரால் சிக்கிய பள்ளி முதல்வர்

பள்ளியின் முதல்வர் சாதிரீதியான கருத்துகளால் துன்புறுத்துகிறார். அவருடைய நடவடிக்கைகள் என்னை அவமானப்படுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

தர்ஷனா உபால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரார் நகரிலுள்ள ஸ்ரீமதி தாராமாய் வர்தக் மெமோரியல் அகாடமி பள்ளியில் 2016 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். `எஸ்.டி.வி’ என்று பெயரிடப்பட்ட வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள், நூலகர் மற்றும் இதரப் பணியாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளி தொடர்பான தகவல்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றைப் பகிரவும் விவாதிப்பதற்காகவும் இந்தக் குரூப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இதில், தர்ஷனாவும் உறுப்பினராக இருந்துள்ளார்.

ஸ்ரீமதி தாராமாய் வர்தக் மெமோரியல் அகாடமி பள்ளி
ஸ்ரீமதி தாராமாய் வர்தக் மெமோரியல் அகாடமி பள்ளி

மஹாராஷ்டிராவில், மராத்தி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இந்நேரத்தில், ஸ்ரீமதி தாராமாய் பள்ளியில் நூலகராகப் பணிபுரியும் வைஷாலி நாயர் வாட்ஸ்அப் குரூப்பில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

``பள்ளியின் வாட்ஸ்அப் குரூப்பில் இதுமாதிரியான தகவல்களை பகிரக் கூடாது. சாதி தொடர்பான தகவல்களைப் பகிரும்போது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும். மன அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தும்” என்று தர்ஷனா கூறியுள்ளார்.

தர்ஷனாவின் கருத்துக்குப் பள்ளியின் முதல்வர் கிருஷ்ணா ஷா, ``நீங்கள் கூறுவது தவறு. இதுமாதிரியான விஷயங்களில் தர்ஷனா தலையிடக் கூடாது’ என்று வாட்ஸ்அப்-பில் அறிவுரை கூறியுள்ளார்.

``நான் கர்ப்பமாக இருந்ததால் மேற்படி உரையாட விரும்பவில்லை. அமைதியாகவே இருந்தேன். பிப்ரவரி மாதம் எனக்குக் குழந்தை பிறந்தது. நீண்ட விடுமுறைக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியின் முதல்வர் சாதிரீதியான கருத்துகளால் என்னை துன்புறுத்துகிறார். அவருடைய நடவடிக்கைகள் என்னை அவமானப்படுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன” என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், தர்ஷனா.

ஸ்ரீமதி தாராமாய் வர்தக் மெமோரியல் அகாடமி பள்ளி
ஸ்ரீமதி தாராமாய் வர்தக் மெமோரியல் அகாடமி பள்ளி

இது தொடர்பாக மும்பை மிரர்ஸ்க்கு தர்ஷனா அளித்துள்ள பேட்டியில், ``சாதி ரீதியாக என்னை துன்புறுத்தினர். எனக்கு வரவேண்டிய சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

`இதுதொடர்பாக, கிருஷ்ணா ஷாவையும் வைஷாலி நாயரையும் தொடர்புகொள்ள முயலவில்லை' என்று மும்பை மிரர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி கிருஷ்ணா ஷா, வைஷாலி ஆகியோர் மீது எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.