Published:Updated:

`ஒரே பில்லில் ரூ.95,000; 52,000 ரூபாய்க்கு மதுவிற்பனை!’ - ரூ.45 கோடி வசூல் செய்த கர்நாடகா

மது வாங்கிய ரசீது
மது வாங்கிய ரசீது

கர்நாடகத்தில் நேற்று முதல் நாளிலேயே சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைவிட மதுக்கடைகள் திறப்பு என்ற செய்திதான் மதுப்பிரியர்களின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. ஊரடங்கு காலத்தைச் சமாளிப்பதற்கு மத்திய அரசிடம் தேவையான நிதி கேட்டிருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. அப்போது `நீ எதுக்கு தெய்வமே மத்திய அரசிடம் நிதி கேட்கற; ஒரே ஒருநாள் கடையை மட்டும் திற என் தெய்வமே; நீ கேட்ட பணத்தைவிட அதிகமா தர்றோம்” என்ற மீம்ஸ்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன.

மதுபானங்கள்
மதுபானங்கள்

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின. ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவிலான மதுபானங்களை மட்டுமே வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தன. மதுக்கடைகள் திறக்கும் செய்தி அறிந்த மதுப்பிரியர்கள் நேற்று காலையே கடைகளுக்குச் சென்றுவிட்டனர். இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

மதுக்கடைக்கு முன்பு தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்த பெரியவர், மதுக்கடைக்கு முன் விழுந்து வணங்கிய இளம்பெண், ஏதோ ஆஸ்கார் அவார்டு வாங்கியதுபோல் இரண்டு கைகளிலும் மதுபாட்டில்களை ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர் என சமூக வலைதளத்தில் போட்டோக்கள் வட்டமடித்தன.

கர்நாடகத்தில் நேற்று முதல் நாளிலேயே சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் 52,000-க்கு மதுபானம் வாங்கிய ரசீது ஒன்று இணையத்தில் வெளியானது. ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய பட்டியலை வெளியிடுவதுபோல் என்னென்ன மதுவகைகள் வாங்கியுள்ளேன் என்ற லிஸ்டை அந்த நபர் இணையத்தில் வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டார். தற்போது அந்த லிஸ்டே அவருக்கும் மதுபானத்தை விற்றவருக்கும் பெரும் வினையாக முடிந்துள்ளது. `அரசாங்கம்தானே கடையைத் திறந்தது இதில் என்ன பிரச்னை?' என்கிறீர்களா?

மது வாங்கிய ரசீது
மது வாங்கிய ரசீது

மதுபானங்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் அதிகபட்சமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் என்றால் 2.3 லிட்டர் அல்லது பீர் வகைகள் என்றால் 18.2 லிட்டர்தான் விற்பனை செய்யப்படவேண்டும். ஆனால், இந்த 52,000-க்கு மது வாங்கியவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் 17.4 லிட்டரும், பீர் வகைகள் 35.7 லிட்டரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது விற்பனை விதிகளுக்குப் புறம்பானது.

கலால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேசுகையில், ``நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை மீறி அதிகளவுக்கு மதுபானங்களை விற்ற கடையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் விதிமுறைகளை மீறியது தெரியவந்துள்ளது. மதுவாங்கியவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் 17.4 லிட்டரும் பீர் வகைகள் 35.7 லிட்டரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விற்பனையாளரிடம் விசாரித்ததில் 8 நபர்கள் ஒன்றாக வந்து மதுவை வாங்கியதாகவும் அவர்கள் ஒரே ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை செலுத்தியதாகவும் கூறினார். முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்தச் சம்பவத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

மது வாங்கிய ரசீது
மது வாங்கிய ரசீது

இதற்கிடையில் 95,437 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிய ரசீது ஒன்று இணையத்தில் வட்டமடிக்கத்தொடங்கியது. இதுகுறித்து பேசிய கலால்துறை அதிகாரிகள் `விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு