Published:Updated:

`கி.மீ கணக்கில் நீண்ட வரிசை; தள்ளுமுள்ளு... தடியடி!' - மதுபானக் கடைகள்முன் கூடிய மக்கள் #Video

மதுக்கடைகளில் கூடிய கூட்டம்
மதுக்கடைகளில் கூடிய கூட்டம் ( ANI )

ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடைகளின் முன்பு எந்த விதியையும் பின்பற்றாமல் கூடிய மதுப்பிரியர்களின் கூட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில் வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையுடன் தளர்த்தப்பட்டன. இதனால், சுமார் 40 நாள்களுக்குப் பிறகு, பல இடங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இங்கும் சமூக விலகல், முகக்கவசம் அணிவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தின. ஆனால், ஆந்திரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடைகளின் முன்பு எந்த விதியையும் பின்பற்றாமல் கூடிய மதுப்பிரியர்களின் கூட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்திராவில் மாநில அரசானது ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், ``ஒரேநேரத்தில் ஐந்துக்கும் அதிகமான நபர்களைக் கடைகளில் அனுமதிக்கக் கூடாது. அதேநேரத்தில் சமூக விலகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். கடைகளின் முன்பு வாடிக்கையாளர்கள் நிற்பதற்காக வட்டங்கள் வரையப்பட வேண்டும். ஒவ்வொரு வட்டத்துக்கும் இடையில் சுமார் 6 அடி தூரம் இருக்க வேண்டும். பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சானிடைசர்களை வைத்திருக்க வேண்டும். அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் பட்சத்தில் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். நிலைமைகள் மோசமானால் தற்காலிகமாக கடையை மூடலாம். கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மீண்டும் கடைகளைத் திறக்கலாம்” போன்றவை கூறப்பட்டிருந்தன. ஆனால் சித்தூர், நெல்லூர், குண்டூர், ஆனந்தபூர் உட்பட பல இடங்களிலும் உள்ள கடைகளில் மேற்சொன்ன வழிகாட்டுதல்களில் பெரும்பான்மையானவை மீறப்பட்டன.

கோயம்பேட்டிலிருந்து போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பரவிய கொரோனா? - கலக்கத்தில் காவல்துறை #Corona

கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே மதுப்பிரியர்களின் கூட்டம் கடைகளின் முன்பாகக் கூடத்தொடங்கியது. குறிப்பாக, சித்தூரில் உள்ள மதுபானக் கடை ஒன்றின் முன்பு கூடிய கூட்டம் தொடர்பான வீடியோவில், மதுப்பிரியர்கள் பலரும் முகக்கவசங்களை அணியாமல் நீண்ட வரிசையில் தள்ளுமுள்ளுடன் மது வாங்கக் காத்திருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். குண்டூர் மதுபானக்கடை தொடர்பான வீடியோவில் திருவிழாக் கூட்டத்தைப்போல மதுப்பிரியர்கள் திரண்டு நிற்கின்றனர். எனினும், ஆந்திராவின் சில இடங்களில் திறந்த மதுக்கடைகளில் வரிசைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன. அங்கும் கி.மீ கணக்கில் வரிசைகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுக்கடைகளின் முன்பு கூடியிருக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ``ஆந்திராவில் மதுக்கடைகள் முன்பான இந்தக் காட்சிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று தெரியும். எனினும், அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. சமூக விலகலையும் கடைப்பிடிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவும் நிகழ்ந்துள்ளது” என முதல்வர் ஜெகன் மோகனையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

டெல்லியிலும் சுமார் 150 மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. முகக்கவசங்கள் அணியாமலும் சமூக விலகலை மீறியும் பலர் செயல்பட்டுள்ளனர். வரிசைகளை கடைப்பிடிக்காமல் நெரிசல் அதிகமானதால் காவலர்கள் தடியடியும் நடத்தியுள்ளனர். இதை அறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லியில் சில கடைகளில் இன்று காணப்பட்ட குழப்பங்கள் துரதிர்ஷ்டவசமானது. எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி விதிமுறைகளை மீறுவது தொடர்பான செய்திகளை நாங்கள் அறிந்தால் அந்தப் பகுதியில் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும். இதற்கு கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். கடைக்கு வெளியே விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால் கடைகள் மூடப்படும்” என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாசலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பான பிரச்னைகள் இருந்துள்ளன. மேலும், கடுமையான நெரிசல்களும் இருந்துள்ளன. ஆனால், கோவாவில் இந்தப் பிரச்னைகளை சமாளிக்க `நோ மாஸ்க், நோ லிக்கர்’ என்ற ஐடியாவைக் கையாண்டுள்ளனர். இதுதொடர்பாக கோவா மதுபான விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் தத்தாபிரசாத் நாயக் பேசும்போது, ``கோவா முழுவதும் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. எனினும், நெரிசல்கள் அவ்வளவாக இல்லை. நாங்கள் `நோ மாஸ்க், நோ லிக்கர்’ என்ற திட்டத்தையும் சமூக விலகலையும் முறையாகக் கடைப்பிடிக்கிறோம். மாஸ்க் அணியவில்லை என்றால் மதுக்களை விற்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க சில பகுதிகளில் வீட்டிற்கே சென்று மதுவை வழங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்? #VikatanSurvey
அடுத்த கட்டுரைக்கு