Published:Updated:

‘ வெயிட் பண்ணுங்க அங்கிள்.. இதையும் எடுத்துக்கோங்க!’- கேரள முதல்வரை நெகிழவைத்த சிறுமி

kerala Cm
kerala Cm ( Facebook/@PinarayiVijayan )

கேரளாவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் செயலை மொத்த மாநிலமும் பாராட்டிவருகிறது.

கேரளாவில், கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து நீடித்துவருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு, மலப்புரம் போன்ற பகுதிகள்தான் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Flood
Flood

கேரளாவை புரட்டிப்போட்டுள்ள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருள்களும் நிதியுதவிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த அம்மாநில முன்னாள் அமைச்சரும் சி.பி.எம் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீமதி, தன் கையில் அணிந்திருந்த தங்கவளையல்களைக் கழற்றி, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தங்கள் மாநிலம் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, ‘தங்க சேலஞ்ச்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது, கேரளா முழுவதும் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், இதேபோன்ற ஒரு செயல்மூலம் முதல்வர் பினராயி விஜயனை நெகிழவைத்துள்ளார், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்.

Pinarayi Vijayan - sreemathi
Pinarayi Vijayan - sreemathi
Mathrubhumi

சி.பி.எம் கட்சித் தலைவர் லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று எர்ணாகுளம் டவுன் ஹாலில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பினராயி விஜயன் வந்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த லியானா தேஜுஸ் என்ற சிறுமி, தன்னையும் அங்கு அழைத்துச்செல்லும்படி தந்தையிடம் கேட்டு, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவம்தான் அதிக பாராட்டைப் பெற்றுள்ளது.

`கிட்னி பாதிப்பு; 14 ஆபரேஷன்; உடைந்த கால்! - கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்

“கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது லியானா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார். அதேபோல், இந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறிவந்தாள். முதல்வர் எர்ணாகுளம் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்ததும் தன்னையும் அங்கே அழைத்துச்செல்லும்படி கேட்டாள்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan
Facebook/@PinarayiVijayan

அவளின் விருப்பப்படி, சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் எர்ணாகுளம் வந்தோம். அதற்குள் முதல்வர் விழாவை முடித்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அவரைப் பார்த்ததும் அருகில் ஓடிய லியானா, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை நேரடியாக முதல்வரிடம் வழங்கினார்” என லியானாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

அந்தச் சிறுமி முதல்வரிடம் எவ்வளவு பணம் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால், பணம் வழங்கிய பிறகு இரண்டு அடி பின்னால் வந்த சிறுமி, என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. மீண்டும் முதல்வர் கார் அருகில் சென்று, ‘ வெயிட் பண்ணுங்க அங்கிள், இதையும் வாங்கிக்கோங்க’ எனக் கூறி, தான் காதில் அணிந்திருந்த தங்கக் காதணியைக் கழற்றி முதல்வரின் கையில் கொடுத்துள்ளார். சிறுமியின் செயலால் வியந்த முதல்வர், லியானாவைப் பாராட்டி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Liyana Thejus
Liyana Thejus

“லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு கிளம்பும் வேளையில், ஒரு சிறுமி என்னை நோக்கி ஓடி வந்து, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை என்னிடம் அளித்தார். அதை வாங்கிக்கொண்டு நான் புறப்படத் தயாரானபோது, இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, அவரது காதணிகளை என்னிடம் அளித்தார் . இந்தச் சிறுமியின் செயலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவரைப் போன்ற சிறுவர்களைப் பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது. இவர்கள் தான் புதிய கேரளாவின் சிறந்த சொத்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு