Published:Updated:

`வரும் 22-ம் தேதி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!’ - பிரதமர் மோடி #LiveUpdates

மோடி
மோடி

பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்..!

19 Mar 2020 8 PM

மருந்துப் பொருள்களை வாங்கிப் பதுக்க வேண்டாம்!

மோடி, ``கடந்த 2 மாதங்களாக பலரும் தங்களது வீட்டுக்குக் கூடச் செல்லாமல் மருத்துவமனையிலும் விமான நிலையங்களிலும் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா காரணமாக இந்தியப் பொருளாதாரமும் சிக்கலைச் சந்தித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் தொடர்ச்சியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்!” என்றார். மேலும் அவர் யாரும் மருந்துப் பொருள்களை வாங்கிப் பதுக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்!

19 Mar 2020 8 PM

கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து...!

``கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து இந்தியா எத்தனை வலிமையாக உள்ளது என்பதனை இந்த உலகுக்குக் காட்டுவோம். மக்கள் பலர் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்பட்டுக் கடைகளில் அதிகப் பொருள்களை வாங்குகிறீர்கள். அச்சபட வேண்டாம். அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றார் மோடி

19 Mar 2020 8 PM

வதந்திகளைப் பரப்பாதீர்கள்!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``கொரோனா குறித்த வதந்திகளைப் பரப்பாதீர்கள். முடிந்த வரை மற்றவர்களுக்கு தொலைபேசி மூலமாக விழிப்புணர்வு செய்யுங்கள். சிறு மருத்துவக் குறைபாடுகளுக்காக மக்கள் மருத்துவமனையில் குவிய வேண்டாம்.. தள்ளிபோடக்கூடிய அறுவை சிகிச்சை என்றால் அதைத் தள்ளி போடுவது சிறந்தது” என்றார்

19 Mar 2020 8 PM

``வரும் 22 -ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசியப் பணிகள் செய்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீட்டிலே இருங்கள். நோய்க்கு ஆளாக வேண்டாம்... அதைப் பரப்பவும் வேண்டாம். 22-ம் தேதி வீட்டில் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்பவர்களுக்காக கைதட்டல் மூலம் நன்றி தெரிவியுங்கள். ”

19 Mar 2020 8 PM

கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது என்று மட்டும் நினைக்காதீர்கள்!

மோடி, ``கொரோனாவை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை. கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது என்று மட்டும் நினைக்காதீர்கள். வரும் ஞாயிறு அன்று விடுமுறை என யாரும் வெளியே வராதீர்கள். கொரோனாவைத் தடுக்க உறுதி மற்றும் வலிமை மிக முக்கியம். மக்கள் தங்களை தாங்களாகவே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். 22 -ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம்”

19 Mar 2020 8 PM

இந்தியாவைப் பாதிக்காது என நினைப்பது தவறு!

``கொரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என நினைப்பது தவறு” என்ற மோடி தொடர்ந்து, ``மக்கள் அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.. அலுவலகங்களுக்குச் செல்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் யாரும் மெத்தனமாக இருந்து விடக் கூடாது..!” என்றார்

19 Mar 2020 8 PM

மோடி, ``ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணம் இது.. இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.. வரும் சில வாரங்களில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்..

19 Mar 2020 8 PM

மோடி உரை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தொடர்பாக மோடி தற்போது நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்... ``கடந்த இரண்டு மாதங்களாக நாம் கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரமிது.. இது உலகப் போர் போன்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப்போரை விடவும் கொடியதாக கொரோனா இருக்கிறது!"

19 Mar 2020 7 PM

இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் , இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரையில் சுமார் 176 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், தற்போது கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. சமூகப் பரவல் என்ற அடுத்த நிலைக்கு இந்தியா எட்டவில்லை. இது, சற்று ஆறுதலான விஷயம். கொரோனாவின் சமூகப் பரவலைத் தடுக்க, மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்பட கொரோனாவின் சமூகப் பரவல்தான் முக்கியக் காரணம்.

இதைத் தவிர்க்கவே இந்தியா, ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம்கூட ரசிகர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில்தான் நடந்தது. தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணியளவில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அப்போது, பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது பெரும்பாலும் மக்கள் பொதுவெளியில் நடமாடுவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் மத்திய அரசுக்கு நெருக்கமான பலரும் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மோடியின் உரையில் முழுமையாக தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு