Published:Updated:

`மே 17-க்குப் பிறகு என்ன நடக்கும்?’- குழப்பும் அறிவிப்புகளைத் தவிர்க்க மத்திய அரசின் ஸ்மார்ட் பிளான்

பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி ஆலோசனை

மே 17-ம் தேதி ஊரடங்கு முடிந்த பின்னர், நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

`பெருந்தொற்று’ கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முதற்கட்டமாக, இதிலிருந்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து மே 4-ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டன. அப்போது, பாதிப்பைப் பொறுத்து நாடு முழுவதும் உள்ள பகுதிகள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Mahesh Kumar A

ஒவ்வொரு முறை விலக்கு அளிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடும்போது எவற்றுக்கெல்லாம் அனுமதி அல்லது எதையெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என முழுமையான பட்டியலை வெளியிட்டு வந்தது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகளும் ஆலோசனை நடத்தி இதேபோன்றதோர் அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தன.

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

இப்படிப் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியானதால் மக்களிடையே வழிகாட்டுதல்கள் தொடர்பான குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து மே 17-ம் தேதிக்குப் பிறகான தளர்வுகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்தமுறை எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை அல்லது எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்த அறிவுறுத்தல்கள் மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரும் என்கிறார்கள். அவற்றைத் தவிர மற்றவைகள் அனுமதி அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் சொல்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.

பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய அரசைப் பொறுத்தவரை, பாதிப்புகள் அதிகம் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கருத்தில் கொண்டு அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த முடிவெடுக்கப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதைவிட குறிப்பிட்ட பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் நோய்ப் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், மற்ற பகுதிகளிலும் போதிய முன்னெச்சரிக்கையுடன் பொதுப்போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்கிறார்கள்.

ஊரடங்கு இருக்கு... ஆனா இல்ல... மூன்றாம் கட்ட ஊரடங்கு.... #LockDown #Version3.0

இதுதொடர்பாக பேசிய மத்திய அரசு அதிகாரிகள், `எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்று 5 அல்லது 6 விஷயங்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவைகள் தவிர மற்றவைகள் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படும். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதில், அவர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ளப்படும். இதுதொடர்பாகப் பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்திய பின்னர், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் வரும் 15-ம் தேதி இறுதி முடிவெடுக்கும். அதற்குப் பின்னர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்’’ என்கிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு
AP | Rajesh Kumar Singh

தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகத் தொழிற்சாலைகளில் ஒவ்வொரு ஷிஃப்டுக்கும் இடையே 40 நிமிட இடைவெளி, ஒரு சீட் இடைவெளியில் மக்கள் அமரும் வகையில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது, அதேபோல் பொது இடங்களில் 10 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடுவதைத் தடுப்பது எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்கள், பொது இடங்களில் சானிடைசர்கள் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மே 17-க்குப் பிறகான ஆக்‌ஷன் பிளான் குறித்து பிரதமர் அலுவலகம் இறுதி முடிவெடுத்த பின்னர் மே 15 அல்லது 16-ம் தேதி வாக்கில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு