Published:Updated:

`லாக்டௌன், வைரஸூக்குப் பதிலாகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது!’-ராகுல் காந்தி உரையாடலில் ராஜீவ் பஜாஜ்

ராஜீவ் பஜாஜ்
ராஜீவ் பஜாஜ்

``பிரச்னைகள் தொடர்பாக மக்களிடம் பிரதமர் விளக்கமாக உரையாற்ற வேண்டும். ஏனெனில், சரியோ தவறோ, பிரதமர் சொல்லும் விஷயங்களை மக்கள் பின்பற்றுவதாகத் தெரிகிறது.”

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கை அரசுகள் சரியாகக் கையாளவில்லை என விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நாட்டில் இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனச் சாதாரண மக்கள் முதல் நிபுணர்களை வரை அச்சம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதாரம் மற்றும் ஊரடங்கு குறித்து துறை சார்ந்த வல்லுநர்களிடம் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி கலந்துரையாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குநர் ராஜீவ் பஜாஜ் உடன் ராகுல் காந்தி இன்று உரையாடலை மேற்கொண்டார். அப்போது ராஜீவ் பேசுகையில், ``நீங்கள் (அரசு) இந்தப் பிரச்னையைத் தீர்க்கவில்லை. நிச்சயமாகப் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்துவிட்டீர்கள். கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை அழித்துவிட்டீர்கள். இந்தியாவில் மிகவும் கடுமையான முறையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான ஊரடங்கை வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது மிகவும் கடினமான ஒரு விஷயம். இதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. மக்களின் மனதில் உள்ள அச்சத்தை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த பிரச்னைகள் தொடர்பாக மக்களிடம் பிரதமர் விளக்கமாக உரையாற்ற வேண்டும். ஏனெனில், சரியோ, தவறோ பிரதமர் சொல்லும் விஷயங்களை மக்கள் பின்பற்றுவதாகத் தெரிகிறது” என்றார்.

`9/11 புதிய அத்தியாயம்; கொரோனா புதிய புத்தகம்!’ - சுகாதார நிபுணருடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

தொடர்ந்து பேசிய அவர், ``நாம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்கிறோம் என்பதை பிரதமர் நாட்டு மக்கள் அனைவரிடமும் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வைரஸூக்கு பயப்பட வேண்டாம் என்றும் மிகவும் குறைவான மக்கள்தான் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இது மிகவும் அவசியமானது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைப் பார்த்து இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. இது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. பல்வேறு வகைகளில் நாம் அவர்களிடமிருந்து மாறுபட்டுள்ளோம். மிகவும் மோசமான சூழ்நிலையையே இது உருவாக்கும். கிழக்கு நாடுகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கைகளை நாம் எடுத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ``உலகம் முழுவதும் லாக்டௌன் அமல்படுத்தப்படும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. உலகப் போரின்போதுகூட இந்த அளவுக்கு லாக்டௌன் அமல்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்காது. அப்போதுகூட பெரும்பாலான விஷயங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இது மிகப்பெரிய அளவிலான பேரழிவு. மத்திய அரசு, மாநில முதலமைச்சர்களின் வழியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். மத்திய அரசு உதவியாளராகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தற்போது பின்வாங்கிவிட்டது. இந்தியாவில் லாக்டௌன் தோல்வியடைந்த ஒன்றுதான். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், லாக்டௌனை தளர்த்தும் ஒரேநாடு இந்தியாதான். இந்த லாக்டௌன் ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிக அளவில் பாதித்துள்ளது” என்று பேசினார்.

ராகுல் காந்தியுடன் கலந்துரையாடுவதாக பஜாஜ் தன் நண்பர்களிடம் கூறியதும், அவரின் நண்பர்களில் ஒருவர் அவருடன் பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் ராஜீவ் தெரிவித்துள்ளார். `ஊடகங்களுடன் பேசுவது வேறு, ராகுல் காந்தியுடன் பேசுவது வேறு. இது சிக்கலுக்கு வழி வகுக்கும்’ என அவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். நண்பர் யாரென அவர் குறிப்பிடவில்லை. அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, ``நாங்கள் பொருளாதாரம், ஊரடங்கு, தொழில்நுட்பம் போன்றவற்றைக் குறித்துதான் பேசப்போகிறோம்” என்று கூறியுள்ளார். எச்சரிக்கைகளை மீறி பஜாஜ் தன்னுடன் பேசியதற்காக ராகுல் தனது பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.

`லாக்டௌன் தோல்வி; அடுத்து என்ன?’ - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ராகுல் காந்தி
அடுத்த கட்டுரைக்கு