Published:Updated:

`லாக்டௌன் தோல்வி; அடுத்து என்ன?’ - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``ஊரடங்கை அறிவிக்கும்போது, 21 நாள்களில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுவோம் என்று பிரதமர் கூறியிருந்தார். ஆனால், தற்போது 60 நாள்களுக்கும் மேல் ஆகிவிட்டது.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. தொடர்ந்து பாதிப்பு அதிகமாகிவருவதால், மூன்று கட்டங்களைக் கடந்து, நான்காம் கட்டமாக ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கில் பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை படிப்படியாகத் தொடங்க வேண்டும் என்று சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாகிவரும் சூழலில், அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர் எனலாம். மத்திய அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல்வேறு எதிர்கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் ஊரடங்கு தளர்வு குறித்தும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். ட்விட்டரில், காணொளி வாயிலாக ராகுல் காந்தி இன்று ஊடகங்களிடம் பேசினார்.

`சாலையில் அமர்ந்து தொழிலாளர்களின் குறைகளைக் கேட்ட ராகுல்’-காரில் அனுப்பி வைத்த காங்கிரஸ் தொண்டர்கள்

வீடியோவில் அவர் பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு திட்டம் தோல்வியடைந்துள்ளது. நாட்டில் வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. அதை எதிர்த்துப் போராட மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? பிரதமர் மோடி எதிர்பார்த்ததைப் போல, நான்கு கட்ட ஊரடங்குகளும் பலன் கொடுக்கவில்லை. கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவரும் சூழலில் ஊரடங்கைத் தளர்த்தும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்தியாவை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர என்ன திட்டம் உள்ளது? பரவிவரும் நோயைக் கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எவ்வாறு உதவி செய்யப்போகிறார்கள்? மாநில அரசுகளுக்கு எவ்வாறு உதவி செய்யப்போகிறார்கள்? சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?” போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கொரோனா
கொரோனா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாதத் தொடக்கத்தில் அறிவித்த நிவாரணங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக இருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேலும், ``இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரடங்கை அறிவிக்கும்போது, 21 நாள்களில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுவோம் என்று பிரதமர் கூறியிருந்தார். ஆனால், தற்போது 60 நாள்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இந்த ஊரடங்கால் வைரஸை எதிர்த்து வெற்றிபெற முடியவில்லை. `அடுத்த என்ன?’ என்பதுதான் அரசாங்கத்திடம் என்னுடைய கேள்வியாக இருக்கிறது” என்று ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பாதிப்படைந்த ஏழைகளுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும், எல்லைகளில் நடக்கும் பிரச்னைகள் குறித்து எந்த தெளிவும் இல்லாததால், அரசாங்கம் அதைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். நேபாளம் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பன குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கை அறிவிக்கும்போது, நாட்டில் 496 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்திருந்தனர். 9 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தனர். ஆனால், தற்போது சுமார் 1.45 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ராகுல் காந்தியின் வீடியோ உரையாடல்கள்... அக்கறையா? அரசியலா?
அடுத்த கட்டுரைக்கு