Published:Updated:

`நேபாளிகள்போல் இருக்கிறீர்கள்; பாஸ்போர்ட் கிடையாது!’ - ஹரியானா சகோதரிகளை அதிரவைத்த அதிகாரிகள்

சகோதரிகள்
சகோதரிகள் ( twitter - ANI )

``என்னுடைய தாத்தா நேபாளத்திலிருந்து வந்தவர். என்னுடைய அப்பா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்” என்று சகோதரிகள் தெரிவித்தனர்.

ஹீனா மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சண்டிகரைச் சேர்ந்த சகோதரிகள். இருவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக சண்டிகரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால், ``இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு நேபாளிகளைப்போல இருக்கிறார்கள்” என்ற காரணத்தைக் கூறி பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

இதுதொடர்பாக ஹீனா கூறுகையில்,``காவல்துறையினர் ஆவணங்களைச் சரிபார்த்தனர். பின்னர், சண்டிகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்லுமாறு அம்பாலாவில் உள்ள அலுவலகத்தில் சொன்னார்கள். ஆனால், சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள அதிகாரி சஹ்தேவ் கௌஷிக் எங்களது ஆவணங்களைச் சரியாகப் பார்க்கவில்லை. மாறாக, எங்களது முகங்களைப் பார்த்து ஆவணங்களில் நேபாளிகள் என்று எழுதினார். எங்களது தேசிய அடையாளத்தை நிரூபிக்கும்படியும் கூறினார். சந்தோஷ், தனது ஆதார் எண் மற்றும் பத்தாம் வகுப்புச் சான்றிதழை வழங்கினார். நான் என்னுடைய கல்விச் சான்றிதழ்களையும் வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பித்தேன். ஆனால், அதை ஒரு பொருட்டாக அவர் மதிக்கவே இல்லை.

என்னுடைய தாத்தா நேபாளத்திலிருந்து வந்தவர். என்னுடைய அப்பா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். நாங்கள் ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜைக் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டோம். அதன்பின்னர், இரண்டு நாள்கள் கழித்து சண்டிகர் பாஸ்போர்ட் அதிகாரி எங்களை அழைத்து ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றார்” என்று வேதனை தெரிவித்தார்.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

அம்பாலாவின் துணை ஆணையர் அஷோக் சர்மா, அந்தச் சகோதரிகளின் ஆவணங்களில், `நேபாளிகளைப்போல தெரிகிறார்கள்’ என்று அதிகாரிகள் எழுதியதை உறுதி செய்தார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஷர்மா,``எனது கவனத்துக்கு இந்த விஷயம் வந்தவுடன், இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்தேன். எனது தலையீட்டுக்குப் பிறகு இருவரும் பாஸ்போர்ட் அதிகாரிகளால் அழைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு