Published:Updated:

`வழிபாட்டுக்குப் பின்னர் இதை வாசியுங்கள்!’- சீரோ மலபார் சபையின் லவ் ஜிகாத் சுற்றறிக்கை சர்ச்சை

சீரோ மலபார் சபை
சீரோ மலபார் சபை

கிறிஸ்துவ பெண்களைக் குறிவைத்து நடக்கும் லவ் ஜிகாத் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும். ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்காக கிறிஸ்துவ பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளது சீரோ மலபார் சினட்.

கேரள மாநிலத்தில் உள்ள சீரோ மலபார் சபைக்கு உட்பட்ட சர்ச்சுகளில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி. அந்தச் சுற்றறிக்கையை சர்ச்சுகளில் வழிபாட்டுக்குப் பின்னர் வாசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதல் என்ற தலைப்பில் லவ் ஜிகாத் பற்றி கூறப்பட்டிருந்தது. கிறிஸதுவ பெண்களைக் குறிவைத்து நடக்கும் லவ் ஜிகாத் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்துகிறது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்காக கிறிஸ்துவ பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற காதல் கேரளத்தில் அதிகரித்து வருவது ஆபத்தானது.

சீரோ மலபார் கர்த்தினால் அறிவிப்பு
சீரோ மலபார் கர்த்தினால் அறிவிப்பு

இதற்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்படிருந்தது. மேலும், கேரளத்தில் கிறிஸ்துவ பெண்களைக் குறிவைத்து திட்டமிட்டு லவ் ஜிகாத் நடப்பதாகவும், கேரளத்திலிருந்து ஐ.எஸ் அமைப்புக்கு சேர்க்கப்பட்ட 21 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து மாறிச் சென்றவர்கள் என்றும் கடந்த வாரம் எர்ணாகுளத்தில் நடந்த ஆயர்களின் சினட் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மத ரீதியான இந்தக் காதல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சினட் வலியுறுத்தியது.

இந்த நிலையில் சர்ச்சுகளுக்கு அனுப்பப்பட்ட கர்த்தினாலின் கடிதத்துக்கு சீரோ மலபார் சபைக்குள்ளேயே எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, எர்ணகுளம் - அங்கமாலி மறைமாவட்டத்தில் பாதிரியார்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில சபைகளில் அந்தச் சுற்றறிக்கை வாசிக்கப்படவில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. பாதிரியார்களின் பேரவை மற்றும் ஆயர்களின் பேரவை கூடும்போது எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம் என சீரோ மலபார் சபையைச் சேர்ந்த பாதிரியார் ஜோஸ் வயலிக்கோடத்து கூறியுள்ளார்.

சீரோ மலபார் சபை
சீரோ மலபார் சபை

எர்ணாகுளம் - அங்கமாலி மறைமாவட்டத்தில் அதிகமான சர்ச்சுகள் லவ் ஜிகாத் குறித்த ஆயர்களின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், பி.ஜே.பி-யோடு நெருங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இவர்கள் லவ் ஜிகாத்தைக் கையில் எடுத்திருப்பதாகவும் அவர்கள் சபைக்குள்ளேயே விமர்சனம் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு