Published:Updated:

`எதுவும் பேசக்கூடாது; தாடியைப் பிடுங்கி எறிவோம்!’- உ.பி-யில் செய்தியாளருக்கு நேர்ந்த துயரம்

உத்தரப்பிரதேசத்தில், செய்தியாளர் ஒருவரை போலீஸார் கைதுசெய்து 2 மணி நேரத்துக்குப் பின்னர் விடுவித்துள்ளனர்.

ஓமர் ரஷித்
ஓமர் ரஷித்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் வலுத்துவருகிறது. இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளரிடம் போலீஸார் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர். ஓமர் ரஷித் என்ற செய்தியாளர், தனது நண்பருடன் உணவகத்தில் அமர்ந்திருந்தபோது, போலீஸாரால் வலுக்கட்டாயமாக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 2 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்திருத்தனர். முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட பின்னரே செய்தியாளர் ஓமர் ரஷித்தை விடுவித்துள்ளனர்.

உ.பி.போராட்டம்
உ.பி.போராட்டம்

ஓமர் ரஷித் பேசுகையில், “போராட்டம் தொடர்பான செய்திகளை அனுப்புவதில் பிஸியாக இருந்தேன். என்னுடன் நண்பர் ராபின் வர்மா இருந்தார். அவர், சமூக ஆர்வலர். உள்ளூர் ஹோட்டலில் நண்பரின் வைஃபை உதவியுடன் லேப்டாப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். திடீரென 5 நபர்கள் உள்ளே வந்தார்கள். `இங்கே என்ன பண்றீங்க; யார் நீங்க?' எனக் கேட்டனர். நான், செய்தியாளர்கள் எனக் கூறினேன். `உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டதுடன், எங்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

என்னுடைய மொபைல்போனைப் பிடுங்கினர். யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றனர். நான் கூறும் விளக்கத்தைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. காவல் நிலையத்தில், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர். என்னுடைய உடைமைகள் அனைத்தையும் போலீஸார் எடுத்துக்கொண்டனர்.

என்னுடைய நண்பரை பெல்ட்டால் கடுமையாகத் தாக்கினர். அவரது கன்னத்தில் பலமுறை அடித்தனர். அந்தப் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கேள்வி கேட்டனர். வன்முறையில் எனது நண்பர் ஈடுபட்டதாகக் கூறிக்கொண்டே அவரைத் தாக்கினார்கள். நானும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினர். போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறினார்கள்.

போராட்டம்
போராட்டம்

நான், என்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்தேன். அவர்கள், என்மீது குற்றம் சாட்டுவதிலே குறியாக இருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீரிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்டனர். காஷ்மீரிகளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்றனர். அவர்களது கேள்விக்கு நான் பதில் கூற முயற்சிக்கும்போதெல்லாம், ‘வாயமூடு பேசாதே!’ என்றனர். எங்களை மீண்டும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு புறநகர் காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், எங்களைக் கடுமையான வார்த்தைகளால் பேசினார். மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றனர். என்னைப் புகைப்படம் எடுத்தனர். `என்னுடைய கேள்விகளுக்கு நீ பதிலளிக்கவில்லை என்றால், உன்னுடைய தாடியைப் பிடுங்கி எறிந்துவிடுவேன், கொலை செய்துவிடுவேன்' என போலீஸார் மிரட்டினர்”என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 20 மாவட்டங்களில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.