Published:Updated:

`தடுப்பூசி செலுத்தியும் ஆன்டிபாடி வரலையே?' - அடார் பூனவாலா மீது புகார் அளித்த நபர்

Adar Poonawalla
Adar Poonawalla ( Photo: Twitter / adarpoonawalla )

`கோவிஷீல்டின் முதல் டோஸுக்குப் பிறகு உடலில் நல்ல அளவு ஆன்டிபாடிகள் உருவாகின்றன' என்று ஐ.சி.எம்.ஆர் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவ் ஊடகங்களில் கூறியதை இவர் மேற்கோள் காட்டினார்.

கோவிஷீல்டு டோஸ் எடுத்துக் கொண்டாலும், அது தன் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கவில்லை என்று லக்னோவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா என்பவர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவாலா மற்றும் பலர் மீது புகார் அளித்துள்ளார்.

லக்னோவில் உள்ள ஆஷியானா காவல் நிலையத்தில் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் டி.சி.ஜி.ஏ இயக்குனர், சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, தேசிய சுகாதார மிஷன் இயக்குநர் அபர்ணா உபாத்யாய் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

புகார்தாரர் பிரதாப் சந்திரா, ஏப்ரல் 8-ம் தேதி கோவிஷீல்டின் முதல் டோஸைப் போட்டுக்கொண்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். 28 நாள்களுக்குப் பிறகு, தான் இரண்டாவது டோஸைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று சந்திரா கூறினார். ஆனால், அந்த நாளில் அவருக்கு இரண்டாவது டோஸின் தேதி ஆறு வாரங்களாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளியை 12 வாரங்களாக அரசாங்கம் மாற்றியது.

முதல் டோஸைப் பெற்ற பிறகு தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று பிரதாப் சந்திரா சொல்கிறார். ``கோவிஷீல்டின் முதல் டோஸுக்குப் பிறகு உடலில் நல்ல அளவு ஆன்டிபாடிகள் உருவாகின்றன" என்று ஐ.சி.எம்.ஆர் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவ் ஊடகங்களில் கூறியதை இவர் மேற்கோள் காட்டினார்.

அதோடு, இந்தப் புகார்தாரர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து கோவிட் ஆன்டிபாடி ஜிடி பரிசோதனையை மேற்கொண்டார்.

சோதனை முடிவில் புகார்தாரரின் உடலில் கோவிட்-19 க்கு எதிராக எந்த ஆன்டிபாடியும் உருவாகவில்லை என்பது தெரியவந்தது. அவரின் பிளேட்லெட்டுகள் (ரத்தத் தட்டணுக்கள்) 3 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக குறைந்திருந்தன.

``தடுப்பூசி செலுத்திய பிறகே என் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கிறது. அதனால் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்'' என்று சந்திரா குற்றம் சாட்டினார்.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்தப் புகாரை போலீசார் பெற்றுக் கொண்டனர். இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதற்கிடையில், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாவிட்டால் தான் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அறிவித்துள்ளார் பிரதாப் சந்திரா.

உடலில் ஆன்டிபாடிகள் உருவாகும் தன்மை நபருக்கு நபர் வேறுபடும் என்பதும் இதற்கு பல காரணிகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு