மிகவும் நேசிப்பவர்களின் பிரிவை நம்மால் சில நேரங்களில் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அது போன்ற சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகளைச் சிலர் எடுப்பதுண்டு. மத்தியப் பிரதேச மாநிலத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அந்த மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில், மஜ்காவன் என்ற கிராமத்தில் ஜோதி என்ற இளம்பெண் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் அங்கிருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். அவரின் உடல் முறையாகச் சடங்குகள் செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. ஜோதியின் அத்தை மகன் கரண் அவர்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இதனால் ஜோதியின் இறப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உறவினர்கள் ஜோதியின் உடலுக்கு தீ மூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்ட நிலையில், கரண் எரியும் சடலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கின்றனர். உடனே அவர்கள் இது குறித்து கரணின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கரண் ஜோதியின் உடல் எரிந்துகொண்டிருந்த தீயில் விழுந்துவிட்டார். அவர் அதில் விழுவதற்கு முன்பு ஜோதியின் சடலத்தைப் பார்த்து வணங்கியதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரண் தீயில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், அவரை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், கரண் பரிதாபமாகச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதையடுத்து கரணின் உடல் அவரின் அத்தை மகள் ஜோதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 21 வயதாகும் கரணின் இந்த முடிவு ஒட்டுமொத்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.