Published:Updated:

வெள்ளத்தில் அடித்துச்சென்ற இளைஞர்களை மீட்க ஒன்றிணைந்த கிராமம்! #ViralVideo

ராம் பிரசாத்

மத்தியப்பிரதேசத்தில், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Madhya pradesh
Madhya pradesh ( ANI )

மத்தியப்பிரதேச மாநிலத்தில், கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தூரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர்ப் பிரச்னை, சாலைகள் துண்டிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

Madhyapradesh
Madhyapradesh

இந்நிலையில், கவுதம்புரா பகுதியில் உள்ள கிராமத்தில் வெள்ளநீரில் இரண்டு இளைஞர்கள் அடித்துச்செல்லப்பட்டனர். கிராமத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விநியோகம் செய்வதற்காகச் சென்றனர் அந்த இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இருவரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, பால் கேனை தூக்கிக்கொண்டு தண்ணீரில் இறங்கி நடந்தனர். வேகமாகப் பாய்ந்த வெள்ளத்தில் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

இதைக் கண்ட கிராம மக்கள், உடனடியாகக் களத்தில் இறங்கினர். வெள்ளத்தை எதிர்த்து வரிசையாக மனிதச் சங்கிலி போல் நின்று இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆஷிக் என்ற இளைஞரை மட்டும் மீட்டனர். மற்றோரு நபரை காப்பாற்ற முடியவில்லை. தண்ணீருக்குள் மூழ்கிய இன்னொருவர் வெளியில் வரவே இல்லை. அவரைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தத் தகவல் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள், அந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மாலையில் இருள் சூழத் தொடங்கியதும், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. அந்தக் கிராமம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதால் மீட்புபணிகள் தாமதமானது. இருப்பினும், உடனடியாகச் செயல்பட்டு ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய கிராம மக்களின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.